கண்டனம் தெரிவித்தார், அமைச்சரவையில் ஹக்கீம்
அம்பாறையில் இனவாத வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்து, பிணை வழங்குவதில் இறுக்கமான சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், தாக்குதலுக்குள்ளனான பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையத்தை அரச செயலவில் புனரமைப்பதுடன், வாகனங்களுக்கும் உடைமைகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (27) அமைச்சரவையில் காரசாரமாகத் தெரிவித்தார்.
அம்பாறை பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையம் தாக்குதல் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
நள்ளிரவு நேரத்தில் பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையம் தீவைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு கலவரங்கள் நடைபெற்று முடியும் வரைக்கும் பொலிஸார் தலையிடாமல் இருந்தமைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். உளவுப்பிரிவுக்கு தெரியாமல் இந்த விடயங்கள் நடந்திருக்காது. ஆனால், உளவுப்பிரிவும் இந்த விடயத்தில் அவதானம் செலுத்த தவறியுள்ளது என்று ரவூப் ஹக்கீம் அமைச்சரவையில் குற்றஞ்சாட்டினார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனவும் அமைச்சரவையில் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இதில் கைதுசெய்யப்படுபவர்கள் மீது பிணை வழங்குவதில் இறுக்கமான நிலைப்பாட்டைக்கொண்டுள்ள "சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை" (International Convention Civil and Political Rights) சட்டத்தின் கீழ், உயர் நீதிமன்றத்தில் A Grade வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கூறியுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அம்பாறையிலுள்ள முஸ்லிம் நபரொருவருக்கு சொந்தமான உணவகம் ஒன்றில் கருத்தடை மாத்திரை உணவில் கலந்துகொடுப்பதாக குற்றம்சாட்டி, வற்புறுத்தி, தாக்கி துன்புறுத்தி நிர்ப்பந்திருப்பது காணொளி மூலம் தெரியவருகிறது. அத்துடன் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி தங்களது வஞ்சகங்களை தீர்த்துள்ளனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும். நாடு முழுவதும் இனக்கலவரத்தை உருவாக்கும் பின்னணியும் இதில் இருக்கிறது.
தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல், வர்த்தக நிலையம் போன்றவை அரச செலவில் புனரமைக்கப்பட வேண்டும். அத்துடன் எரியூட்டப்பட்ட வாகனங்களுக்கும் நஷ்டயீடு வழங்கப்படவேண்டும். அமைச்சர் சுவாமிநாதன் இழப்பீட்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடமிருந்து பெற்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவேண்டும். அதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கி அரச செலவில் இழப்பீடுகள் உடனடியாக வழங்கப்பவேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவையில் வலியுறுத்தினார்.
அமைச்சர்களான றிஷாத் பதியுதீன், மனோ கணேசன், தயா கமகே ஆகியோரும் இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இன்றைய அமைச்சரவையில் வலியுறுத்தினர். தற்போது சம்பவம் நடந்துள்ள பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் பாரபட்சமற்ற விதத்தில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியளித்துள்ளனர்.
இனவாதத்தை ஏற்படுத்தி, மக்களை குழப்பும் நோக்கில் சில குழுக்கள் வன்முறையில் இறங்கியிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளால் இந்த இனவாதக் குழுக்கள் உற்சாகமடைந்திருக்கலாம். இந்த நேரத்தில் எல்லா தலைமைகளும் ஒற்றுமையாக செயற்பட்டு தீர்வுகாண முன்வரவேண்டும். இப்பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் தந்துள்ளதால், முஸ்லிம் மிகவும் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் பேரில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர் ஆகியோர் இன்று அதிகாலை சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை நேரில் கண்டறிந்தனர். அங்கு பாதுகாப்பு நடவடிக்கை துரிதப்படுத்தியதுடன், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு பொலிஸாருக்கு வலியுறுத்தினர்.
Aluthgama Beruwala Ginthota ponrillamal uriya nadawadikkai eduppara sattangalukkup poruppana pirathamar
ReplyDeleteBarking dog never bites....no use at all.
ReplyDelete