'கழுத்தறுப்பு' கொழும்பு - லண்டன் உறவு விரிசலடையுமா..?
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பணியிலிருந்து இடைநிறுத்த விடுக்கப்பட்ட உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்துச்செய்துள்ளதால் இலண்டனுக்கும், கொழும்புக்குமிடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
கடும் எதிர்பலைகளையும் மீறி ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான வகையில் ஜனாதிபதியால் எடுக்கப்பட்டுள்ள மேற்படி முடிவால் பிரிட்டன் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இலங்கையின் சுதந்திர தினத்தன்று, இலண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளார் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ.
கழுத்தறுக்கப்படும் என மிரட்டல் விடுக்கப்படும் காணொளி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை இடைநிறுத்துமாறு வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டது.
இந்த உத்தரவையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்துச்செய்து, பாதுகாப்பு ஆலோசகர் பணியில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்ந்து ஈடுபட அனுமதியளித்துள்ளார். பிரிகேடியரின் மேற்படி நடவடிக்கைக்கு எதிராக பிரிட்டன் எம்.பிக்கள் சிலரும் அந்நாட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
அத்துடன், அவரை நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் எனவும் வலியுறுத்தினர். புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இந்தக் கோரிக்கையையே விடுத்திருந்தன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உரிய விசாரணைகள் முன்னெடுப்பதற்கு முன்னர் பிரிகேடியரைப் பாதுகாக்கும் வகையில் தேர்தலை இலக்காகக்கொண்டு ஜனாதிபதியால் எடுக்கப்பட்டுள்ள முடிவால் இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், உள்ளகநீதிப்பொறிமுறையை உருவாக்குவதற்கும் பிரிட்டன் கடந்த ஆட்சியின்போது கடும் அழுத்தங்களைப் பிரயோகித்துவந்தது. ஆட்சிமாற்றத்தின் பின்னர் இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதற்கு பச்சைக்கொடி காட்டிய நாடுகளுள் பிரிட்டனே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நின்றது.
எனினும், இராணுவத்துக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையையும் எடுப்பதற்குத் தான் தயாராகவில்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன மீண்டும் மீண்டும் நிரூபித்துவருகிறார்.
இலண்டனிலுள்ள பிரிகேடியர் விவகாரத்தில் அவர் நடந்துகொண்ட விதம் அதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, கொழும்புக்கு எதிராக இலண்டன் மீண்டும் இறுக்கப்போக்கைக் கடைப்பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment