தவறிழைக்கும் ஊழல்வாதிகளுடன் எனக்கு, எந்தவித கொடுக்கல் வாங்கல்களும் இல்லை - ஜனாதிபதி
நாட்டிற்கு தேவையான அரசியல் மாற்றங்களை நோக்கிய பயணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தல் என்பது நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் அரசியல் இயக்கத்தை பலப்படுத்துவதாகுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (06) பிற்பகல் காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாரையும் பழிவாங்கும் தேவை தமக்கு இல்லை என்பதுடன், தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கி தூய்மையான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான தேவையே தமக்கு இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்துதல் என்பது நாட்டை நேசிக்கும் அரசியல் கட்சியை சீர்குலைக்கும் செயலாகுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், ஊழல் அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்காக கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஊழல் அமைச்சர் ஒருவரின் தேவைக்காக கட்டியெழுப்பப்பட்டுள்ள புதிய கட்சியின் செயற்பாடுகளினால் இந்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாறப்போவதில்லை எனத் தெரிவித்தார்.
தவறிழைக்கும் ஊழல்வாதிகளுடன் தமக்கு எந்தவித கொடுக்கல் வாங்கல்களும் இல்லையென தெரிவித்த ஜனாதிபதி, எதிர்க்கட்சியா ஆளுங்கட்சியா என்பதைக் கருத்திற் கொள்ளாது சகல ஊழல்வாதிகளுக்கும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் இயக்கமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் உள்ளிட்ட இடதுசாரி முற்போக்கு கட்சிகள் உள்ளிட்ட நாட்டை நேசிக்கும் சகல மக்களும் அணிதிரண்டுள்ளனர் என்பதுடன், எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாதெனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் காலி மாவட்ட அபேட்சகர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக காலி சமனல விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் பெருந்திரளான காலி மாவட்ட மக்கள் கலந்துகொண்டதுடன், அவர்கள் இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு அமோக வரவேற்பு அளித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட தலைவர் இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே, அமைச்சர் சந்திம வீரக்கொடி, அனுருத்த பொல்கம்பொல, ஷான் விஜயலால் டி சில்வா, நிஷாந்த முத்துஹெட்டிகம, மனுஷ நாணயக்கார, குணரத்ன வீரக்கோன், யு.ஜீ. ஆரியதிலக்க, மெத்சிறி டி சில்வா உள்ளிட்ட காலி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
Post a Comment