அமைச்சரவை மாற்றம், பற்றி கசிந்துள்ள தகவல்கள்
நல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவை மாற்றம், இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறலாமெனத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், நாளை புதன்கிழமையே, அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக, ஜனாதிபதி காரியாலயத் தகவல் தெரிவிக்கின்றது.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு கண்டதன் பின்னர், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளாரென அறியமுடிகின்றது.
நாளை புதன்கிழமை இடம்பெறவிருப்பது, அமைச்சரவை மாற்றமா? அல்லது அமைச்சுகளுக்காக விடயதானங்களில் மாற்றமா? என்பது தொடர்பிலான தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும், அமைச்சுகளுக்கான விடயதானங்களிலேயே மாற்றங்கள் மேற்கொள்ள இருப்பதாக அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.
தேசிய அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியிலிருக்குமாயின், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுகள் ஆகியனவற்றில் மாற்றங்களை கொண்டுவராது, அமைச்சுகளின் விடயதானங்களில் மட்டும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமென, அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.
இனிவரும் அரசாங்கமானது தேசிய அரசாங்கமாக இல்லாதுவிடின், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கை 30க்கு வரையக்கப்படும் என்பதுடன், அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர்களின் எண்ணிக்கை 45ஆக மட்டுப்படுத்தப்பட்டிக்குமென, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின், முழுமையான கண்காணிப்பின் கீழே, இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன என அறியமுடிகின்றது.
அதுமட்டுமன்றி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரமே, இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அறியமுடிகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரைவாசி நிறைவடைந்ததும், அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்கெனவே தீர்மானித்திருந்தனர். அதனடிப்படையிலேயே, இந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாக அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.
இரு கட்சிகளுக்கும் இடையிலான அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், தேசிய மட்டத்தில் அமைச்சுகளைப் பகிர்ந்துகொள்வதற்கான, விடயதானங்களுக்கு அமையவே, இந்த அமைச்சரவை மாற்றம் மிகவும் சிறியதாக இடம்பெறக்கூடுமென, உள்ளகத் தகவல் தெரிவிக்கின்றது.
இதேவேளை, இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, 5 அமைச்சுகளில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த மாற்றத்தின் போது, சில அமைச்சுகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய பொறுப்பின் கீழ் கொண்டுவரவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
அதனடிப்படையில், தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்த அமைச்சர் சாகல ரத்னாயக்கவின் பொறுப்பின் கீழுள்ள, சட்டம், ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, ஜனாதிபதி கீழ் கொண்டுவரப்படக்கூடும்.
மங்கள சமரவீரவின் பொறுப்பின் கீழுள்ள, நிதியமைச்சையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய பொறுப்பின் கீழ் கொண்டுவருவார் அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படலாம் என்றும் அறியமுடிகின்றது.
சட்டம், ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சில், சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சராக, அமைச்சர் ஜோன் செனவிரத்ன நியமிக்கப்படலாமென அறியமுடிகின்றது.
இதனிடையே, சாகல ரத்னாயக்கவுக்கு, மின்சக்தி மற்றும் எரிபொருள் சக்தி அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் என அறியமுடிகின்றது.
அதேபோல, ஊடக மற்றும் நீதி அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுகளும், அஜித் பி. பெரேராவுக்கும், மங்கள சமரவீரவை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக மீண்டும் நியமிப்பதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஏற்படும் எந்த மாற்றங்களும் நாட்டின் பொருளாதாரம், நாட்டு மக்களின் நலன்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, மேலும் மக்களின் சுமையையும் கஷ்டத்தையும் தான் அதிகரிக்கும்.
ReplyDelete