Header Ads



அமைச்சரவைக்கு வந்த அம்பாறை அராஜகம் - ஜனாதிபதி, பிரதமரிடம் ரிஷாட் நேரடியாக முறைப்பாடு

அம்பாறை நகரில் முஸ்லிம் கடைகளை உடைத்து, பள்ளிவாசலையும் அதனோடு ஒட்டியிருந்த தங்கும் அறைகளையும் நொறுக்கி, வாகனங்களை தீக்கிரையாக்கிய சம்பவம் தொடர்பில் தொடர்புபட்ட அனைத்து நாசகாரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அமைச்சரவையில் வலியுறுத்தியதோடு இது ஒரு திட்டமிட்ட முஸ்லிம்களுக்கெதிரான சதி நடவடிக்கையென சுட்டிக்காட்டினார்.

இன்று -27-  காலை அமைச்சரவை கூடிய போது அம்பாறை நாசகார நடவடிக்கை தொடர்பில் அமைச்சர்களான, ரவூப் ஹக்கீம், மனோ கனேசன் ஆகியோரும் இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சரவையில் பிரஸ்தாபித்தனர். 

”பொலிசார் நினைத்திருந்தால் இதனைத் தடுத்திருக்கலாம், அவர்கள் அசமந்தப் போக்குடனேயே இருந்துள்ளனர். அத்துடன் அவர்கள் முன்னிலையிலேயே மோசமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன” இவ்வாறு சுட்டிக்காட்டிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இனவாதிகள் மீண்டும் எதனையோ இலக்காகக் கொண்டு இந்தக் காரியத்தை தொடங்கியுள்ளனர். இதனை அவர்கள் ஆரம்பமாகவே கருதிச் செயற்பட்டுள்ளனர் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

சேதத்திற்குள்ளாக்கப்பட்ட பள்ளிவாசல், அதனோடு ஒட்டியிருந்த கடைகள் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.

அமைச்சர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை கேட்டறிந்து கொண்ட ஜனாதிபதி, தானும் பிரதமரும் இது தொடர்பில் இன்று காலை பேச்சு நடாத்தியதாகவும் இது தொடர்பில் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு இந்த நாசகார நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தினார்.

1 comment:

  1. Pirathmarum Janathipathium vote bankitku payandu nadawadikkai edukka thayangak kudathu

    ReplyDelete

Powered by Blogger.