ஜனாதிபதியின் சத்தமும், கோபமும் அதிகரித்துள்ளது - கனவு கண்டு பயந்தவர் போல் பேசுகிறார்
உதயங்க வீரதுங்க குற்றமற்றவர் எனில், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு சந்தர்ப்பம் இருந்தாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு கருத்து தெரிவித்த அவர்,
உதயங்க வீரதுங்க என்பவர் மகிந்த ராஜபக்சவின் சித்தியின் மகன். அவர் ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக பணியாற்றியுள்ளார்.
மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதேபோல் அவரை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உதயங்க வீரதுங்க குற்றம் செய்யவில்லை என்றால் ஏன் ஒழிந்து இருக்கின்றார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசாங்கத்தின் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதை நாங்கள் கடந்த காலத்தில் கண்டோம்.
சர்வதேச பொலிஸார் கைதுசெய்யும் முன்னர் நீதிமன்றத்தில் ஆஜராகி தான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபித்திருக்கலாம். இவ்வளவு காலம் அவர் எப்படி சுதந்திரமாக நடமாடினார் என்ற கேள்வி எழுந்தது.
எது எப்படி இருந்த போதிலும் அவர் தொடர்பான நடவடிக்கைகள் தற்போது ராஜதந்திர ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. அரசாங்கம் கே.பி. தொடர்பிலும் இப்படியான பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்தது.
இறுதியில் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் கே.பி. விடுவிக்கப்பட்டார். இதனால், உதயங்க வீரதுங்க தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் ஊடக கண்காட்சி எப்படி இருக்கும் என்பதை கூறமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருடர்களை பிடிக்கும் இரண்டாவது நடவடிக்கையை ஆரம்பித்து விட்டதாக ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால், நாங்கள் முதல் நடவடிக்கையைக் கூட காணவில்லை. தேர்தல் நடக்கவிருப்பதால், ஜனாதிபதி இரண்டாவது நடவடிக்கை குறித்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சத்தமும் கோபமும் அதிகரித்துள்ளது. சாட்டையை சுழற்றுகிறார். வாளை வீசுகிறார். ஆனால், தண்டனை வழங்கியதை நாங்கள் காணவில்லை.
செயலில் ஒப்புவித்து காட்டுமாறு ஜனாதிபதியிடம் கூறுகிறோம். நீண்டகாலம் அமைதியாக இருந்த ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் கனவு கண்டு பயந்தவர் போல் பேசுகிறார்.
இதுநாள் வரை திருடர்களை பாதுகாத்தார். தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பாக நாங்கள் அவதானித்துக் கொள்வோம்.
இதேவேளை, பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 34 அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஜனாதிபதியுடன் உள்ளனர். அவர்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment