கீர்த்தி தென்னக்கோன் மீது, முபாரக் மௌலவி விளாசல்
முஸ்லிம் பெண் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதை கண்டித்த கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தனது கருத்தை நியாயப்படுத்துவதற்காக இஸ்லாமிய கலாசாரத்தையும் முஸ்லிம்களின் வரலாற்றையும் கொச்சைப்படுத்தியிருப்பது சரியானதல்ல.
எம்மை பொறுத்த வரை பெண்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற சில மௌலவிமாரின் கருத்துக்களை நாம் மறுத்து வருகிறோம். ஒரு ஜனநாயக நாட்டில் ஆணோ பெண்ணோ தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு. ஆனால் போட்டியின்றி பெண்களை 25 வீதம் சபைக்குள் உள்வாங்க வேண்டும் என்பது ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டமாக தெரியவில்லை. அத்துடன் இது இரவு பகலாக கஷ்டப்பட்டு தேர்தல் பிரசாரம் செய்யும் ஆண்களுக்கு செய்யும் அநியாயமாகவே பார்க்கிறோம்.
முஸ்லிம் பெண்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்ல வந்த கீர்த்தி தென்னக்கோன்
கலாசாரத்தை விட சட்டமே முக்கியமானது என்கிறார். சட்டம் என்பது அச்சத்தினால் பின்பற்றப்படும் ஒன்றாகும். கலாசரம் என்பது உணர்வாலும் உள்ளத்தாலும் பின்பற்றப்படும் ஒன்றாகும். சட்டத்தைக்காட்டி கலாசாரத்தை விடச்சொல்வது பிழையான எடுகோளாகும்.
உள்ளூராட்சி சபைகளில் பெண்கள் இருப்பது நல்லது. அதனை நாம் மறுக்கவில்லை. ஆனால் இதனை பெண்களின் விருப்பத்துக்கு விடுவதே ஜனநாயகமாகும்.
நமது நாட்டு நடைமுறைகளில் பெண்கள் ஏனைய பெண்களுக்கு உதவும் பழக்கம் மிக அரிது. இதற்கு உதாரணமாக வைத்தியசாலை பிள்ளைப்பெறு பிரிவை பார்க்கலாம். இங்கு பணியாற்றும் பெண்கள் பிரசவ வலியால் துடிக்கும் பெண்களை ஏசுவதையும் தூசண வார்த்தைகளால் கூட கண்டிப்பதையும் பெரும்பாலும் காணலாம். இதனை மீறி சில நல்ல பெண்களும் உண்டு. ஆனாலும் அவர்கள் குறைவு. இது போலவே உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியிடாமலேயே மேலதிக பட்டியல் மூலம் சென்ற பெண், பெண்களுக்காக செயற்படுவார் என்பதற்கான உத்தரவாதம் உண்டா? நான் என்ன உங்கள் வாக்குகளால் வந்தவளா? இது அர்சு எனக்கு தந்த கவுரவம் என சொல்லமாட்டாள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அத்துடன் இந்த நாட்டு முஸ்லிம்கள் தோணியில் வந்த அரேபியர்கள் வழித்தோன்றல் என்றும் அவர்கள் மேலாடை அநியாத இந்த நாட்டு பெண்களை மண முடித்து வாழ்ந்தார்கள் என்றும் மேலாடை இல்லாத இந்நாட்டு பெண்களை அவர்கள் தமது அறபு நாட்டுக்கு கொண்டு சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என கேட்கிறார்.
அறபுப்பெண்கள் உடல் முழுவதும் மூடி உலகுக்கே பெண்ணியத்துக்கு கவுரவம் தந்த காலத்தில் இந்த நாட்டு பெண்கள் மேலாடை இன்றி வாழ்ந்தார்கள் என்ற உண்மையை சொன்ன தென்னக்கோண் பாராட்டுக்குரியவர். ஆனாலும் முஸ்லிம்கள் அனைவரும் அரேபியாவிலிருந்து வந்தவர்கள் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் இந்த நாட்டில் கால் வைத்த முதல் மனிதனும் முதல் முஸ்லிமுமான ஆதம் காலத்திலிருந்து இந்த நாட்டில் வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் இஸ்லாத்தை பின்பற்றினர். பின்னர் இஸ்லாத்தை விட்டும் தூரமாகி வாழ்ந்த போது முஹம்மது நபியினால் இஸ்லாம் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட போது அதனை கொண்டு வந்த அறபிகள் மூலம் இஸ்லாத்தை ஏற்ற்க்கொண்டார்கள். அறபிகளில் ஒரு சிலரே இங்கு திருமணம் முடித்திருக்கலாம். அவர்கள் மண முடித்த பெண் மேலாடை இல்லாதவளாக இருந்தாலும் அவளுக்கு அரபிகள் மேலாடை அணிவித்தே இருப்பர் என்பதையும் புரிந்து கொள்ளலாம். காரணம் இந்த உலகுக்கே கலாசாரத்தை கற்பித்தது இஸ்லாமாகும்.
வட்டார தேர்தலில் போட்டியிடுவோரில் பெண்கள் 10 வீதம் உள்வாங்கப்பட வேண்டும் என்பது கட்டாயப்படுத்தியிருப்பதை ஓரளவு ஏற்கலாம். ஆனால் போட்டியிடும் பெண்கள் தோற்றுப் போனாலும் போட்டியிடாமல் ஹாயாக மேலதிக பட்டியலில் உள்ள பெண்கள் சபைக்கு போவது என்பது போட்டியிடும் பெண்களுக்கும் செய்யும் அநியாயமாகும்.
பெண்களை சபைக்கு அனுப்பத்தான் வேண்டும் என்றால் போட்டியிட்டும் தோற்ற பெண்ணையாவது சபைக்கு அனுப்ப வேண்டும் என்று கட்டாயம் இருந்தால் அதில் ஓரளவு நியாயம் இருக்கும்.
ஆகவே உள்ளூராட்சி சட்ட மூலத்தில் பெண்கள் சம்பந்தப்பட்ட விடயம் மீண்டும் பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டு திருத்தப்பட வேண்டும் என்பதில் உலமா கட்சி உறுதியாக உள்ளது. அதில் வேட்பாளர் பட்டியலில் கட்டாயம் 10 வீதம் பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பது இருக்கத்தக்க நிலையில் மேலதிக பட்டியலில் 30 வீதம் பெண்களை உள்வாங்க வேண்டும் என்ற சட்டம் நீக்கப்பட வேண்டும். அத்துடன் 10 வீத வேட்பாளர் பட்டியலில் உள்ள பெண்கள் வெற்றி பெறாத பட்சத்தில் 25 வீதம் என்றில்லாமல் 10 வீதம் பெண்கள் சபைக்கு உள்வாங்கப்பட வேண்டும் என்பதுடன் இது தோற்ற பெண்களில் இருந்தாவது தெரிவு செய்யப்பட்டு 10 வீதமாக வேண்டும் என கொண்டு வரப்பட வேண்டும். மேலதிக பட்டியலில் ஆணோ பெண்ணோ எத்தனை வீதமும் உள்வாங்கலாம். இதில் கட்டாயம் இருக்க கூடாது. மேலதிக பட்டியலில் 100 வீதம் பெண்களைத்தான் ஒரு கட்சி உள்வாங்க நினைத்தால் அதற்கும் இடந்தரும் வகையில் மேலதிக பட்டியல் வேற்பாளர் விடயத்தில் பால் பார்க்கக்கூடாது.
ஆகவே பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை தடை செய்வது சரியல்ல என்று நாம் வலியுறுத்துவதுடன் வட்டாரத்தில் போட்டியிடாமலேயே பெண்கள் கட்டாயமாக சபைக்கு உள்வாங்கப்படுவது என்பது மாற்றப்பட வேண்டும் என்றும் அரசை கோருகின்றோம். இதற்கான குரல்களை அரசியல் கட்சிகளும் எழுப்ப வேண்டும் என கேட்கின்றோம்.
- முபாறக் அப்துல் மஜீத்
Post a Comment