யாருடனும் மோத, நாங்கள் தயாரில்லை - மகிந்தவின் வெற்றிக்கு பிக்குகளே காரணம் - ஞானசார
தேசப்பற்றாளர்கள், பௌத்த பிக்குகள் போன்றோரின் நோக்குகளும், நிலைப்பாடுகளுமே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு காரணம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -15- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்த வெற்றிக்கு ஒருவர், இருவர் காரணமல்ல. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டுக்குள் பெற்றுக்கொண்டுள்ள சமூக மூலதனம் என்பது மிகப் பெரியது. இதனை யாரும் மறுக்க முடியாது.
மகிந்த ராஜபக்ச தலைமையில் தேர்தலில் பங்கேற்றதால், மக்கள் ஜனவரி 8 ஆம் திகதி செய்த தவறை திருத்திக் கொண்டுள்ளனர்.
இந்த வெற்றியால், எவரும் தலைகீழாக ஆட வேண்டியதில்லை. ஜீ.எல். பீரிஸ் போன்றவர்களின் கடந்த கால அரசியல் என்ன என்பது எங்களுக்கு தெரியும்.
தீர்வு பொதி, சமஷ்டி அரசியலமைப்பு ஆகியன கொண்டு வரப்படும்போது எங்கிருந்தார் என்பது எங்களுக்கு தெரியும். அவை பற்றி நாங்கள் கவலையடைவில்லை. கடந்த காலம், கடந்தகாலம் தான்.
எனினும் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான பொதுஜன பெரமுனவின் ஆதரவான இணையத்தளம் ஒன்றில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. நான் கூறியது போல் போலியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யவும் இல்லை. மேடைகளிலும் ஏறவில்லை. நாங்கள் கட்சி அரசியலில் ஈடுபடுவதும் இல்லை.
முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் போராட்டங்களை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்க போவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் இந்த செய்தியை வெளியிட்டதாக நினைத்து கொண்டு ஜீ.எல். பீரிஸ் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
முஸ்லிம் மக்களை ஏமாற்ற மற்றுமொரு முயற்சி என ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் யாருடனும் மோதலுக்கு செல்ல தயாராக இல்லை. எவர் மீதிருக்கும் அச்சமும் இதற்கு காரணமல்ல. இது மோதலுக்கு செல்லும் நேரமில்லை. நாடு மிகவும் பயங்கரமான இடத்தில் இருக்கின்றது.
தேர்தலுக்கு பின்னர் நாடு ஏலத்திற்கு விடும் பொருள் போல் மாறியுள்ளது. அரசாங்கத்தை அமைக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் விலை நிர்ணயிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.
நாட்டில் என்றுமில்லாத வகையில் குழப்பமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், பௌத்த பிக்குகள் என்ற முறையில் நாங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தருணம்.
இவ்வாறான சூழலில், எம்மை கலாச்சார ரீதியாக அழிக்கும் வெளிநாட்டு சக்திகளும், அமெரிக்கா மற்றும் இந்திய தூதுவர்களே அரசாங்கத்தை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறி வருகின்றனர்.
நாங்கள் அறியாமலேயே இலங்கை காலனித்துவ நாடாக மாறியுள்ளது. இப்படியான நிலைமையில் ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்களுடன் மோதல்களை ஏற்படுத்திக்கொள்ளும் தேவை எமக்கில்லை. இதனால், அறிக்கையில் உள்ள விடயங்களை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
Vantuttaangayya vantuttaaanga...
ReplyDeleteIni dance thaaan...