நிசாம் பக்கீர் அலி, இலங்கை தேசிய அணி பயிற்றுவிப்பாளராக நியமனம்
இலங்கை அணியின் முன்னாள் வீரர் நிசாம் பக்கீர் அலி தேசிய கால்பந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிறைவேற்று அதிகாரக்குழுவும், ரோஹித்த பெர்னாந்து மற்றும் மேஜர் ஜெனரல் அத்துல கொடிப்பிலி தலைமையிலான தேசிய கால்பந்து அணியின் முகாமைத்துவ குழுவும் மிகவும் கவனமாக கலந்தாலோசித்து எடுத்த முடிவின் பின்னரே பக்கீர் அலியினை தேசிய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில், பக்கீர் அலி அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கை கால்பந்து அணியின் பயிற்சியாளராக செயற்பட ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.
“நிசாம் பக்கீர் அலி இலங்கை கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்ததை கூறுவதில் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இலங்கையின் கால்பந்து துறைக்கு பாரிய சேவைகள் செய்த ஒரு நபராக அவர் இருந்த போதிலும், அவரது திறமையினையும், ஆற்றலினையும் சரியான முறையில் வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் இன்னும் வழங்கப்படவில்லை.
தலைமை பயிற்சியாளராக மாற்றுவதற்குரிய அனைத்து வேலைகளும் பூர்த்தியாகியிருக்கின்றன. அவர் மாலைதீவிலிருந்து வந்து நாம் செய்து வைத்திருக்கும் உடன்படிக்கை பத்திரத்தில் கையொப்பம் இடுவது மாத்திரமே எஞ்சியிருக்கின்றது.“ என இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்திருந்தார்.
“நாங்கள் இந்தப் பதவிக்காக முன்னாள் தலைமைப் பயிற்சியாளர்களான டட்லி ஸ்டெய்ன்வோல், சம்பத் பெரேரா ஆகியோரின் பெயர்களையும் பரிசீலனை செய்திருந்தோம். எனினும் அவர்களின் கடந்த கால பதிவுகள் எதுவும் எம்மை திருப்திப்படுத்தவில்லை. அதோடு, இன்னும் சில பயிற்சியாளர்களையும் கவனத்தில் எடுத்தோம். அவர்களில் எவருக்கும், பயிற்றுவிப்பாளருக்கு இருக்க வேண்டிய “ஏ” தரத்திலான சான்றிதழ் இருக்கவில்லை” என அனுர டி சில்வா மேலும் குறிப்பிட்டிருந்தார்.
தேசிய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் டட்லி ஸ்டெய்ன்வோல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி விலகியதிலிருந்து இலங்கை கால்பந்து அணியானது தலைமை பயிற்சியாளர் ஒருவர் இல்லாமல் இன்றுவரை காணப்படுகின்றது. ஸ்டெய்ன்வோலோடு சேர்த்து தேசிய அணியின் உதவி பயிற்சியாளர் தேவசகாயம் ராஜமணி மற்றும் கோல்காப்பு பயிற்சியாளர் மஹிந்த கலகெதர ஆகியோரும் தங்களது பொறுப்புக்களிலிருந்து அப்போது நீக்கப்பட்டனர்.
Post a Comment