ஐ.தே.க.க்குள் புகைச்சல் - வாய்திறந்த 3 பேர்
அமைச்சரவையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புகைச்சல் எழுந்துள்ளது.
எட்டு அமைச்சர்கள், மூன்று இராஜாங்க அமைச்சர், ஒரு பிரதி அமைச்சர் ஆகியோர் நேற்று பதவியேற்றனர். இவர்களில் 11 பேர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவையில் பெரியளவிலான மாற்றங்கள் செய்யப்படும் என்றும், மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று நடந்த சிறியளவிலான அமைச்சரவை மாற்றம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரவை மாற்ற நிகழ்வு முடிந்து வெளியே வந்த இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க இதனை ஒரு நகைச்சுவை நாடகம் என்றும், இதன் அடுத்த பகுதி விரைவில் அரங்கேறும் என்றும் கூறியிருந்தார்.
அதேவேளை, ஐதேகவின் மற்றொரு முக்கிய தலைவரான முன்னாள் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் இதனை விமர்சித்துள்ளார்.
“மக்கள் எதிர்பார்க்கும் அமைச்சரவை மாற்றம் சில ஐதேக அமைச்சர்களை மாற்றுவது அல்ல. இது ஒரு நகைச்சுவை, கண்துடைப்பு. மக்களின் எதிர்பார்ப்புகள் கருத்தில் கொள்ளப்பட்டு, அது அமைச்சரவை மாற்றத்தில் பிரதிபலிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அதேவேளை, சில ஐதேக உறுப்பினர்கள் தமக்கான அமைச்சுக்கள் குறித்து திருப்தியடையவில்லை என்று பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் பெரேரா அந்தப் பதவியை விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்த சில மணிநேரங்களிலேயே ஐதேகவினர் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளமை அந்தக் கட்சிக்குள் நிலவும் குழப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.
Post a Comment