ரணிலைப் பாதுகாக்கிறார் மைத்திரிபால – மகிந்த காட்டம்
மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற விரும்பவில்லை, அவருக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறார் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய அவரிடம் செய்தியாளர்கள் பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கான சட்டபூர்வ தன்மை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை சிறிலங்கா அதிபர் கோரியுள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “எதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோர வேண்டும், நிறைவேற்று அதிகாரம் அதிபருக்கு இருப்பதை அவர் மறந்து விடக் கூடாது.” என்று குறிப்பிட்டார்.
அத்துடன், பிரதமரை அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து பாதுகாக்கிறாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மகிந்த ராஜபக்ச, நிச்சயமாக, என்று கூறியதுடன் வேறு யார் அவரை பாதுகாப்பது? என்றும் கேள்வி எழுப்பினார்.
“சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைப் பிரதமராக நியமித்தால், அவர்களுக்குப் பின்னால் இருப்போம் என்று நாங்கள் கூறினோம். ஐதேகவைச் சேர்ந்த ஒரு பிரதமருக்குப் பின்னால் இருக்க மாட்டோம்.
ஐதேகவுக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் தான், தற்போதைய பிரதமர் பதவியில் இருக்கிறார்.” என்றும் அவர் தெரிவிததுள்ளார்.
Post a Comment