Header Ads



புதிய பயணத்திற்கு தயார் - இறுதி பிரச்சாரத்தில் ஜனாதிபதி அறிவிப்பு

தூய அரசியல் இயக்கத்துடன் நாட்டை முன்கொண்டு செல்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை முதன்மைப்படுத்தி அனைத்து மக்களும் ஒரே கொடியின் கீழ் அணி திரண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த மக்கள் சக்தியுடன் தூய அரசியல் இயக்கத்தை முன்னெடுத்து புதியதோர் தேசத்தை கட்டியெழுப்பும் புதிய பயணத்திற்கு தயார் என்று ஜனாதிபதி தெரிவித்தார். 

நேற்று (07) பிற்பகல் கதுருவளை நகரில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்புத் தொடரின் இறுதி நிகழ்வான மாபெரும் மக்கள் சந்திப்பு நேற்று பிற்பகல் பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்குபற்றுதலுடன் பொலன்னறுவை கதுருவளை நகரத்தில் இடம்பெற்றது. 

அங்கு திரண்டிருந்த மக்களின் பெரும் ஆரவார வரவேற்புக்கு மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, தாய் நாட்டை உயிரைப்போன்று பாதுகாத்து அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு மக்கள் சேவையை முன்னெடுப்பதாகத் தெரிவித்ததுடன், தாய்நாட்டின் ஒருமைப்பாட்டையும் தேசிய பாதுகாப்பையும் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் பாதுகாப்பதாகவும் தெரிவித்தார். 

ஊழல், மோசடிக்காரர்களுடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல தான் தயாராக இல்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தனது அரசியல் வாழ்க்கையில் ஒருபோதும் இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிக்கு இடம் வைக்கவில்லையென்றும் அக்கொள்கையை உறுதிப்படுத்தி தூய அரசியல் இயக்கத்துடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார். 

அண்மையில் பொலன்னறுவை பிரதேசத்திற்கு வருகைதந்திருந்த முன்னாள் ஜனாதிபதி பொலன்னறுவை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக தெரிவித்துள்ள விமர்சனங்கள் குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி, கிராமத்தையும் நகரத்தையும் அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லும் புதிய நிகழ்ச்சித்திட்டம் தற்போது விரிவாக நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகத் தெரிவித்தார். 

இன்று மக்கள் புதிய மாற்றத்தை நோக்கி தூய அரசியல் இயக்கத்துடன் நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, விமர்சனங்களைக் கைவிட்டு நகரங்கள் கிராமங்கள் தோறும் சென்று அந்த மாற்றத்தை நேரில் பார்க்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கும் விமர்சனங்களை முன்வைப்போரிடமும் தான் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் துமிந்த திசாநாயக்க, வட மத்திய மாகாண ஆளுநர் பீ.பீ.திஸாநாயக்க, ஊவா மாகாண ஆளுநர் எம்.பீ.ஜயசிங்க, தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன, வீரகுமார திஸாநாயக்க, அநுருத்த பொல்கம்பொல, சந்திரசிறி சூரியாரச்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2018.02.08

No comments

Powered by Blogger.