‘‘இலங்கை வீரர்களிடமிருந்து, இன்னும் அதிகமாக எதிர்பார்க்கின்றேன்"
பங்களாதேஷுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின்போது மூவகையான சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பங்குபற்றிய இலங்கை, அவை அனைத்திலும் வெற்றிபெற்றது. இந்த வெற்றியானது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநராக பதவியேற்ற சந்திக்க ஹத்துருசிங்கவுக்கு வெற்றிகரமான ஆரம்பமாக அமைந்தது.
எனினும் இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பதாகவும் இதனை விட சிறந்த ஆற்றல்களை அவர்களால் வெளிப்படுத்த முடியும் என நம்புவதாகவும் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்தார்.
ஏஞ்சலோ மெத்யூஸ் உபாதைக்குள்ளானதன் காரணமாக மூவகை சர்வதேச தொடர்களிலும் தினேஷ் சந்திமால் அணித் தலைவராக செயற்பட்டதுடன் அவரது தலைமையில் இலங்கை அணி அபார வெற்றியீட்டியது.
பங்களாதேஷ், ஸிம்பாப்வே ஆகிய நாடுகளும் பங்குபற்றிய மும்முனை சர்வதேச ஒருநாள் தொடரில் இலங்கை சம்பியனானதுடன் பங்களாதேஷுடனான இருதரப்பு டெஸ்ட் தொடரில் 1 க்கு 0 எனவும் சர்வதேச இருபது 20 தொடரில் 2 க்கு 0 எனவும் வெற்றியீட்டியது.
இந்த வெற்றிகளுடன் திங்களன்று நாடு திரும்பிய இலங்கை அணியினருக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பின்போது ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய தலைமைப் பயிற்றுநர் சந்திக்க ஹத்துருசிங்க, ‘‘இலங்கை வீரர்களிடமிருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்க்கின்றேன். அத்துடன் அவர்களால் இதனை விட சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்த முடியும் என நம்புகின்றேன்’’ என்றார்.
‘‘சிறந்த புரிந்துணர்வுடன்கூடிய தொடர்பாடல்கள், சாதுரியமான நெகிழ்வுப்போக்கு, சிறந்த சுற்றுச்சூழல் என்பனவே இலங்கை சகல தொடர்களிலும் வெற்றிபெறுவதற்கான பிரதான காரணிகள்’’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
‘‘இந்த அணியினால் இன்னும் அதிகமான முன்னேற்றத்தை அடையமுடியும். நான்கு சிறந்த வீரர்கள் உபாதைக்குள்ளாகி தற்போது ஓய்வாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அணிக்கு திரும்பியதும் பெரிய அணிகளுடன் போட்டியிடக்கூடியதாக இருக்கும். எமது நாட்டில் நிறைய ஆற்றல்கள் மிக்க வீரர்கள் இருக்கின்றனர்.
வர்களுக்கு சரியான வாய்ப்பளிக்கவேண்டி இருக்கின்றது. சர்வதேச அரங்கில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வலது கை பந்துவீச்சாளரும் (முத்தையா முரளிதரன்), இடது கை பந்துவீச்சாளரும் (ரங்கன ஹேரத்) நமது நாட்டிலேயே உள்ளனர்’’ என ஹத்துருசிங்க மேலும் கூறினார்.
இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் திசர பெரேராவின் ஆற்றலை மெச்சிய ஹத்துருசிங்க, சிரேஷ்ட வீரர் ஜீவன் மெண்டிஸையும் பாராட்டத் தவறவில்லை.
இதேவேளை, ‘‘இலங்கை அணி வெற்றிபெறுவதை வெளியிலிருந்து பார்க்க நேரிட்டமை ஏமாற்றமளிக்கின்றது. ஆனால் வீரர்கள் அனைவரும் துணிச்சலுடன் விளையாடி வெற்றிபெற்றமை பாரட்டத்தக்கது. சீடர்களுடன் மேய்ப்பர் மீண்டும் இணைந்ததன் பலனாக சகலதுறைகளிலும் நாங்கள் பிரகாசிக்கின்றோம்’’ என மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.
மெத்யூஸுக்குப் பதிலாக இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் தலைவராக விளையாடிய டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால், ‘‘வெற்றிகளுடன் நாடு திரும்பியதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். ஓர் அணி என்பதைவிட ஒரு குடும்பமாகவே விளையாடினோம். ஹத்துருசிங்கவின் வருகை எங்களை வெகுவாக மாற்றியுள்ளது. முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு அவர் ஓர் உந்துசக்தியாக விளங்கு கின்றார்’’ என்றார்.
Well done !
ReplyDelete