ஆடைமாற்றிக் கொண்டு வருகையில், சபாநாயகருக்கு கூறப்பட்ட விடயம்
அரசியல் நெருக்கடி தொடர்பில் விவாதம் நடத்தப்படவேண்டுமென, ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, சபையமர்வு 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, கட்சித்தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால், நாடாளுமன்றத்தில் காலைவேளையில் நேற்று (19) ஏற்படவிருந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர், நாட்டின் தேசிய அரசியலில் நெருக்கடி நிலைமையொன்று ஏற்பட்டது. இந்நிலையில், முதன்முறையாக நாடாளுமன்றம் கூடியமையால், சபை நடவடிக்கை குறித்து, சகலரும் கூடுதல் அவதானம் செலுத்தியிருந்தனர். அவ்வாறான நிலையில், நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்றுக் காலை 10 மணிக்கு கூடியது.
சபையில் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, “நாட்டின் அரசியல், ஸ்திரதன்மையற்று இருக்கிறது. அரசியல் நெருக்கடி தொடர்பில் முழுநாடும் அவதானம் செலுத்தியுள்ளது. ஆகையால், அந்த விவகாரம் குறித்து, நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்தப்படவேண்டும்” என்றார்.
இதன்போது, ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் 20 பேர், ஒரேடியாக எழுந்துநின்றனர். மேற்படி விவகாரம் தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு, அனுமதியளிக்குமாறு கோரிநின்றனர்.அவர்களின் கோரிக்கைக்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “இந்த விவகாரம் தொடர்பில் கதைப்பதில் பிரச்சினையில்லை. இதுவும் முக்கியமான விடயம்தான். ஆனால், ஒழுங்குப்பத்திரத்தில் உள்ள இரண்டு விடயங்களும் முக்கியமானவை” என்றார்.
இதன்போது குறுக்கிட்ட, சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் குறிப்பிடப்படும், இந்த விவகாரம் தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு, எழுத்து மூலமாக, கோரிக்கையெதுவும் உங்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளதா என, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கேட்டார்.
அக்கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த கரு ஜயசூரிய, “இந்த விவகாரம் தொடர்பில் முன்கூட்டியே அறிவித்திருந்தால் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி முடிவெடுத்திருக்கலாம். எனினும், ஆடையை மாற்றிக்கொண்டு, சபைக்குள் வந்துகொண்டிருந்த வேளையிலேயே, தன்னிடம் இதனைக் கூறினர்.
“என்றாலும், நீங்கள் கூறுகின்ற விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளேன். அது பிரச்சினையில்லை. அதற்காக, கூச்சல் குழப்பமிடவேண்டியதில்லை. அப்படியாயின், சபை நடவடிக்கைகளை தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டு, கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்தி, இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கலாம்” என்றார்.
இதன்போது எழுந்த ஒன்றிணைந்த எதிரணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூச்சல் குழுப்பமிட்டனர். அதற்கு இடமளிக்காத சபாநாயகர் கரு ஜயசூரிய, காலை 10:30 மணியளவில் சபை நடவடிக்கைகளை, 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
அதன்பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அந்தக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே, இந்த விவகாரம் தொடர்பில், இன்று (நேற்று) மாலை 4 மணிமுதல் 7 மணி வரை, மூன்று மணிநேரம், மேற்படி விவகாரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.அதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை தொடர்பிலான விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.
Post a Comment