Header Ads



சீதனத்திற்கு பதிலாக சிறுநீரகம் - இப்படியும் ஒரு கொடூரம்

நிச்சயதார்த்தத்தின்போது கூறப்பட்ட வரதட்சணையைச் செலுத்தாததால், தனது சிறுநீரகத்தைத் திருடி கறுப்புச் சந்தையில் விற்றதாக, இந்தியப் பெண்ணொருவர் தனது கணவர் மீது பொலிஸில் புகாரளித்துள்ளார்.

மேற்கு வங்கம், முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த ரீட்டா சர்க்கார் (28) என்ற இந்தப் பெண்ணுக்கு அண்மையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது பக்க சிறுநீரகத்தைக் காணாமல் திகைத்தனர். இந்தச் செய்தியால் ரீட்டாவும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

அப்போதுதான், சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் ‘அபெண்டிக்ஸ்’ சிகிச்சைக்காக தன்னைத் தனது கணவர் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கச் செய்ததும் அங்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து யாரிடமும் கூற வேண்டாம் என கணவர் கூறியதும் ரீட்டாவுக்கு நினைவுக்கு வந்துள்ளது.

அவரது குற்றச்சாட்டின் பேரில் அவரது கணவர் பிஸ்வஜித் சர்க்காரை பொலிஸார் விசாரித்தனர். அதன்போது, சிறுநீரகத்தை விற்க தனது மனைவி சம்மதித்ததாக அவர் கூறியுள்ளார்.

எனினும் உடல் உறுப்புகளை வர்த்தக ரீதியாக வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவரையும் அவரது சகோதரரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரீட்டாவின் குடும்பத்தினர் கொடுக்க வேண்டிய வரதட்சணை நிலுவைத் தொகை வெறும் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.