பல்டி அடித்தால், பதவி பறிக்கப்படுமென எச்சரிக்கை
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் கட்சி மாறினால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு எச்சரித்துள்ளது.
உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சினால் இன்று -21- விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் கட்சி மாறினால் அவர்களின் பதவியைப் பறிக்கும் அதிகாரம் கட்சிகளின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகள் தேர்தல் சட்டத்தின் 10 (அ) பிரிவில் எந்தவொரு கட்சியின் செயலாளரும் தமது கட்சி சார்பில் தெரிவான உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு எழுத்து மூலம் அறிவிக்கலாம்.
அந்தக் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி கருதும் பட்சத்தில் குறித்த உறுப்பினரின் பதவியை ரத்துச் செய்து, கட்சி செயலாளர் பரிந்துரைக்கும் வேறொரு நபருக்கு அப்பதவியை வழங்க முடியும். இதன் காரணமாக கட்சி மாறும் நபர்கள் தங்கள் பதவிகளை இழக்க நேரிடும் என்றும் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment