குண்டை எடுத்துவந்த இரானுவ, வீரரின் நிலைமை கவலைக்கிடம்
(எம்.எப்.எம்.பஸீர்)
பண்டாரவளையிலிருந்து தியத்தலாவை சென்று அங்கிருந்து மஹியங்கனை - ஹிராதுருகோட்டை நோக்கி பயணிக்க சென்றுகொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் வண்டியில் கைக்குண்டொன்று வெடித்து பரவிய தீயினால் 19 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்ப்ட்டுள்ளன.
அதன்படி சம்பவம் தொடர்பில் இன்று மாலை வரை 25 பேரின் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் அதில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையபப்டுத்தி பதுளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஆர்.ஜி.எம்.பி. எல்லபொலவின் நேரடி மேற்பார்வையில் பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சர் சுதத் மாசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தியதலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குன்டுவெடிப்பு, அதனால் பரவிய தீ பரவலால் காயமடைந்து ஒரு கால் அகற்றப்பட்ட இராணுவ வீரர் தியதலாவை ஆரம்ப வைத்தியசாலையின் 6 ஆம் இலக்க வாட்டில் சிகிச்சை பெறும் நிலையில், குண்டை எடுத்து வந்ததாக கூறப்படும் இராணுவ வீரர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
அந்த இரானுவ வீரரின் இரு கால்கள், இரு கைகளும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 19 பேரில் நேற்று மாலையாகும் போதும் 6 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியிருந்ததுடன் 13 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக அறிய முடிகின்றது.
இந் நிலையில் கைக்குண்டை எடுத்து வந்ததாக கூறப்படும் இராணுவ வீரர் ஆபத்தான நிலையில் உள்ள நிலையில் இன்று மாலை வரை அவரின் வாக்கு மூலங்கள் பெறப்பட்டிருக்கவில்லை.
Post a Comment