மசிடோனியா' நாட்டின் பெயரை, மாற்றுமாறு கிரேக்கத்தில் ஆர்ப்பாட்டம்
மசிடோனியா என்ற பெயரில் நீடிக்கும் பல தசப்தகால சர்ச்சை தொடர்பில் கிரேக்க தலைநகர் ஏதன்ஸின் வீதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 140,000 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிரேக்கத்தின் வடக்கு பிராந்தியமான மசிடோனியாவின் பெயரை கொண்டு அண்டை நாடு தம்மை மசிடோனியா என்று அழைத்துக் கொள்வதற்கே கிரேக்க மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்த பிரச்சினையை தீர்க்க கிரேக்க அரசு முன்வைத்திருக்கும் பரிந்துரையையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்த்துள்ளனர்.
இதன்போது ‘மசிடோனியாவை கைவிடு’ மற்றும் ‘மசிடோனியா கிரேக்கமாகும்’ என்ற கோசங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியில் சின்டக்மா சதுக்கத்தில் ஒன்று திரண்டனர்.
இந்த பெயர் சர்ச்சைக்காக கிரேக்கத்தில் இடம்பெறும் இரண்டாவது ஆர்ப்பாட்டம் இதுவாகும். முன்னதாக மசிடோனிய பிராந்திய தலைநகர் தெசலொனிக்கியில் கடந்த ஜனவரி 21 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 90,000 பேர் வரை பங்கேற்றனர்.
1991 ஆம் ஆண்டு மசிடோனிய நாடு யுகோஸ்லாவியாவில் இருந்து சுதந்திரம் பெற்றது தொடக்கம் இந்த சர்ச்சை இருந்து வருகிறது.
இது அந்த நாடு நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தை பெறுவதிலும் சிக்கலை ஏற்படுத்தியது.
எனினும் மசிடோனியா என்ற பெயரை உள்ளடக்கிய வேறு பெயர் ஒன்றை மசிடோனியா நாட்டுக்கு வைக்கும் பரிந்துரையை கிரேக்க அரசு முன்வைத்துள்ளது. ஒரு காலத்தில் மகா அலக்சாண்டர் ஆட்சி புரிந்த பண்டைய மசிடோன் இராச்சியத்தின் பூர்வீகத்தை தமது மக்கள் கொண்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக மசிடோனிய அரசு வாதிடுகிறது.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு ஐ.நா மற்றும் பல தரப்புகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment