முஸ்லிம்களின் வாக்கு, இவர்களுக்குத்தான்..!
"தீர்க்கமாக தீர்மானியுங்கள்"
அரசியல் ஒரு சாக்கடை ,அது சாணக்கியர்களும், சகுனிகளும் விளையாடும் சதுரங்கம், அதில் சாமானிய மக்கள் ஏமாற்றப் படுகின்றார்கள்.
அரசியல்வாதிகளின் பிரதேசவாதமும், தெருவாதமும், இனவாதம், மதவாதமும் மக்கள் உள்ளங்களை ரணப்படுத்தி கூறுபோட்டு சீலும்,ரத்தமுமாய் நாற்றமெடுத்துக் கொண்டிருக்கின்றது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் வேட்பாளர்களின் தனிமனித வாழ்க்கை, சகோதரர்கள், குடும்பம் என்று ஊழல்,அபகரிப்பு, கழுத்தறுப்பு, துரோகம் என வேட்பாளர்களதும், அவர்தம் குடும்பங்களதும் கௌரவம் மானம் என்பன வெளிச்சம் போட்டு அம்பலப்படுத்தப்படுகின்றன, எது உண்மை, எது பொய் என்று மக்களால் பிரித்தறிய முடியாதளவிற்கு மானபங்கப்படுத்தப்படுகின்றார்கள்.
அதுவும் சிறுபான்மை இனமான முஸ்லிம் இனத்தின் அரசியல்வாதிகளதும், அவர்களது தீவிர விசுவாசிகளதும் பேச்சுக்களும், சமூகவலைத் தளங்களின் பதிவுகளும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளை எதிர்க்கின்றோம் என்று நினைத்து தமது கீழ்த்தரமான பண்புகள் மறைமுகமாக உணர வைக்கப் படுகின்றன.
முஸ்லிம் அரசியலில் பிரதேசவாதமும், இனவாதமும், தெருவாதமும், அவதூறுகூறுதலும் முன்னெப்போதும் இல்லாத அளவு மிகுந்து சமூகம் கேவலப் படுத்தப்படும் தேர்தலாக இத்தேர்தலை காண்கிறோம்.யாவும் நவீன ஜாஹிலிய்யத்தின் வடிவங்களாக வெளிப்படுகின்றன, முகம்மது நபி ( ஸல் ) அவர்கள் தனது முதலும் இறுதியுமான ஹஜ் பிரகடன உரையில் எவற்றை வலியுறுத்தினார்களோ அவை இங்கே தலை கீழாக பின்பற்றப் படுகின்றன.ஒரு சகோதரனின் மானம்,அடுத்த சகோதரனுக்கான அமானிதம், என்பதும்,யாரும் எவருக்கும் மேலோர் கீழோர் இல்லை என்ற அரபிகள் அஜமிகளை விடவோ,அல்லது அஜமிகள் அரபிகளை விடவோ மேலோர் இல்லை என்ற நபிகளாரின் கூற்றும் மறுக்கப்பட்டுள்ளது, இஸ்லாத்தில் கௌரவமாக விதந்துரைக்கப்பட்ட "முஹாஜிரியீன்கள் அன்சாரியீன்கள்"என வெளியேற்றப்பட்ட சமூகத்தையும்,அவர்களை வரவேற்று ஆதரவளித்த சமூகத்தையும் மதிப்பளித்த இஸ்லாமிய கொள்கை இன்று வந்தான் வரத்தான், அகதியான் என கூறு போட்டு பார்க்கப்படுகின்றது.
அரசியல் சாராது, இயக்கங்கள் சாராது, ஜமாஅத்கள் சாராது ஊர் மக்களை ஒன்று படுத்த வேண்டிய பள்ளிவாசல் நிர்வாகங்கள், அதன் உறுப்பினர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசியலில் ஈடுபடுவதும், இயக்கங்கள், ஜமாஅத்கள் சார்பாக பக்கச் சார்பாக செயற்படுவதும்,மிக நீண்ட காலம் அல்லது மரணம் வரை நிர்வாகங்களில் அங்கத்துவம் வகிப்பதும் ஒரு அரசியல் சாக்கடைக்கு ஒப்பானதே.
அரசியல் ஒரு சாக்கடை, என்று ஒதுங்கிவிடாதீர்கள்!
அந்த ஒரு சாக்கடையில் தான் உங்கள் உரிமைகளும் அதிகாரங்களும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது! அந்த ஒரு சாக்கடையில் தான் உங்களுடைய நீதியும் சுதந்திரமும் ஒழித்து வைக்கப்பட்டுருக்கிறது!
அந்த ஒரு சாக்கடையில் தான் உங்களுடைய பொதுத் தேவைகளும் பாதுகாப்பும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது!
ஊழலும், துரோகமும் அந்த சாக்கடையில் இருந்து அகற்றப்பட வேண்டும். சாக்கடை அரசியலை உருவாக்கியதில் வாக்காளப் பொது மக்களாகிய நமக்கும் பெரும் பங்கு உண்டு இம்மண்ணில் அரசியல் எனும் சாக்கடை தூய்மை படுதப்பட வேண்டும்
புறக்கனிக்கப்பட்ட நாம் நமக்காக அல்ல! நம் வாரிசுகளுக்காகவாவது அரசியலை தூய்மை படுத்த வேண்டும்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் தம் பிரதேச அரசியலில் தம்மைச் சுற்றியுள்ள மற்ற இனத்தின் அரசியல் நிலைப்பாட்டிற்கு மாறு செய்யாத, முரண்படாத வகையிலும், அதே நேரம் தேசிய முஸ்லிம் ஒற்றுமை, ஒருமித்த குரல் என்ற நீரோட்டத்தில் இருந்து விலகாமலும் இருத்தல் என்ற நிலைப்பாட்டில் அரசியலில் பயனிக்க வேண்டும்.கத்தி முனையில் நடப்பது போன்றதே இது.
பிரதேச அரசியலில் யாரையும் எதிரியாக்கிக் கொள்ளாமல் எல்லோரையும் நண்பராக்கி அரசியல் முடிவெடுங்கள்.
தேர்தல் பிரச்சார காலங்களில் பல்வேறு உக்திகளாலும்,குயுக்திகளாலும் மூளைச்சலவை செய்யப்பட்டவாக்காளர்கள் ,சுயமான சிந்தனை தெளிவோடும், தீர்க்கதரிசனமான பார்வையோடும் முடிவெடுத்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே எந்த ஒரு அரசியல்வாதியினதும், கட்சியினதும் ஆளுமைகள் உங்கள் சிந்தனையில் செல்வாக்கு செலுத்தப்படக் கூடாது எனக்கருதியே இரண்டு நாட்கள், நாற்பத்தியெட்டு மணித்தியால்ங்களுக்கு முன்னரே சகல விதமான தேர்தல் பிரச்சாரங்களும் தடை செய்யப்படுகின்றன.
சிறந்த சேவையாளனை, கறைபடியாத கரங்களுடையவனை, காட்டிக் கொடுத்து செல்வம் சேர்க்காத தூய்மையாளனை, வெளிநாட்டு அல்லது உள்நாட்டு அந்நிய சக்திகளின் முகவராக, மறைமுகமான நிகழ்ச்சி நிரலோடு (Hidden Agenda) சமூகத்தை வழிநடத்தாதவனை, உங்களோடு எளிமையான முறையில் நட்புரிமை கொள்ளக் கூடிய உண்மையான சேவையாளனை தெரிவு செய்யுங்கள்.
வேட்பாளனது கடந்த கால சமூக செயற்பாடுகளை அளவிடுங்கள்.இனவாதம், பிரதேசவாதம், தெருவாதம், மதவாதம் சார்ந்திருப்போரை நிராகரியுங்கள். அச்சத்திற்காக அடிபணியாதீர்கள், அற்ப சலுகைகளுக்காக விலை போகாதீர்கள்.
உன்னதமான அரசியலுக்காக வாக்களியுங்கள்.
இனி அரசியல்வாதிகள் நமக்காக திரும்பட்டும்! ஒதுங்கிவிடாதீர்கள் ஓரங்கட்டப்பட்டு விடுவீர்கள்! வெறுத்துவிடாதீர்கள் வாழ்வுரிமையையே இழந்து விடுவீர்கள்!
-அஜ்மல் மொஹிடீன்-
Post a Comment