பொலிஸாரிடம் போதைப்பொருளை, கேட்டு கெஞ்சிய மாணவர்கள்
மிக மோசமாக ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில், பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூன்று பாடசாலை மாணவர்கள், பொலிஸாரிடம் போதைப்பொருளை தருமாறு கோரிய சம்பவம் ஒன்று குருணாகல் பிரதேசத்தில் நடந்துள்ளது.
குருணாகல் நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 17 முதல் 21 வயதான இந்த மாணவர்கள், பண்டாரநாயக்கபுர, மல்கடுவாவ மற்றும் இப்பாகமுவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
இவர்கள் பாடசாலை காலத்தில் இருந்தே ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்த பழகியுள்ளதுடன் போதைக்கு மிகவும் மோசமாக அடிமையாகியுள்ளனர்.
இவர்களில் ஒருவரின் தாய் மற்றும் தந்தை பொலிஸ் சேவையில் தொழில் புரிந்து வருகின்றதுடன், மற்றுமொரு இளைஞனின் தந்தை இத்தாலியில் தொழில் புரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு பிரதேசங்களில் இருந்து குருணாகல் நகரில் இயங்கும் பகுதி நேர வகுப்புக்கு வரும் மாணவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் பொருட்களை நீண்டகாலமாக பலவந்தமாக பறித்து வந்த இந்த இளைஞர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து பாதுகாப்பு கெமராக்களில் பதிவான காட்சிகளை பரீட்சித்த பொலிஸார் அண்மையில் இவர்களை கைது செய்துள்ளனர்.
போதைப்பொருளுக்கு பணத்தை தேடுவதற்காக இவர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வந்துள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொலிஸ் சிறையில் வைக்கப்பட்டிருந்த போது இளைஞர்களுக்கு போதை பித்து ஏற்பட்டுள்ளதுடன், போதைப்பொருளை தருமாறு பொலிஸார் அதிகாரிகளிடம் கெஞ்சியுள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள தமது பிள்ளைகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியாவது அவர்களின் உயிர்களை காப்பாற்றி தருமாறு பெற்றோர், பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment