Header Ads



ஆட்சியமைத்தது தேர்தல் செய்வதற்கல்ல - சுதந்திரக் கட்சி மீது, ரணில் குற்றச்சாட்டு

''பிணைமுறி மோசடியுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் எவரும் தொடர்புபடவில்லை. பிணைமுறி மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஆதரவை அனைத்துச் சந்தர்ப்பத்திலும் வழங்கியுள்ளோம். இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசை அமைத்தது தேர்தல் செய்வதற்கல்ல.''

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி அறிக்கையின் பிரகாரம் முன்னாள் நிதி அமைச்சருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடுக்க வேண்டுமென ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது. இதேவேளை, பிணைமுறி அறிக்கையில் ஐ.தே.கவில் எவரும் தொடர்புபட்டுள்ளனரா என்று விசாரணை செய்வதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவொன்றை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நியமித்திருந்தார். இந்தக் குழுவானது முன்னாள் நிதி அமைச்சரும் ஐ.தே.கவின் உபதலைவருமான ரவி கருணாநாயக்கவை, ஐ.தே.கவின் உப தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமெனப் பரிந்துரைத்தது. இந்நிலையில், பிணைமுறி விவகாரத்துடன் ஐ.தே.கவில் எவரும் தொடர்புப்படவில்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

"பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய முதலில் விசாரணைக் குழுவை அமைத்து நாங்கள் வெளிப்படையாகச் செயற்பட்டுள்ளோம். அதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலமும் அளித்துள்ளோம். இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சியமைத்தது தேர்தல் செய்வதற்கல்ல'' என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீது பிரதமர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.