ஐ.தே.க. க்கு நிறைய நன்றிக்கடன் செலுத்திவிட்டேன் - மைத்திரிபால
"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையைப் பறிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடமளிக்காது'' என அக்கட்சியின் பேச்சாளரான டிலான் பெரேரா அறிவித்துள்ள நிலையில், இது விடயத்தில் நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு தான் தலைவணங்குவார் என்று சு.கவின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையைப் பறிக்கவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் இடமளிப்பீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்குப்ப திலளிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
குறித்த வினாவுக்கு ஆம் அல்லது இல்லை என்ற பதிலை ஜனாதிபதி நேரடியாக வழங்கவில்லை.
அவர் வழங்கிய பதில் வருமாறு:
""ஆணைக்குழு அறிக்கையாக இருக்கட்டும் அதற்கு அப்பாற்பட்ட விடயமாக இருக்கட்டும் தனிப்பட்டவர்களுக்காக நான் தலையிடமாட்டேன். உத்தியோகபூர்வ அறிவிப்புகளிலும், அரசியல் மேடைகளிலும் தனிப்பட்டரீதியில் நான் விமர்சனங்களை முன்வைப்பதில்லை. ஊழல், மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டம் உரிய வகையில் செயற்படவேண்டும் என்று பொதுவாகவே வலியுறுத்தி வருகின்றோம்.
நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் ஆகியனவே சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
சட்டஅமுலாக்கம் என்பது மேற்படி திணைக்களங்களுக்குரிய பொறுப்பாகும். அதில் கையடிப்பதற்கோ, அழுத்தம் கொடுப்பதற்கோ, தலையீடு செய்வதற்கோ நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முனையமாட்டேன். அது எனக்கு பொருத்தமற்ற செயற்பாடாகும்.
எனவே, நீங்கள்கூறும் காரணத்துக்கும் (குடியுரிமை விவகாரம்) எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இது விடயத்தில் சட்டத்தை அமுலாக்குகின்ற திணைக்களங்களே தீர்மானம் எடுக்கும். பொறுப்புக் கூறவேண்டியது யார்? எவருக்கு வழக்குப் போடவேண்டும்? எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்? என்பன தொடர்பில் பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றம் ஆகியனவே முடிவெடுக்கும்.
ஆகவே, தனிப்பட்ட நபர்களுக்காக எந்தவொரு சந்தர்பப்பத்திலும் நான் தலையிடமாட்டேன். அது எனது கொள்கையும் கிடையாது'' என்றார் ஜனாதிபதி.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி,
"முன்கூட்டியே இந்த முடிவை எடுத்திருக்கவேண்டும். தற்போது தாமதமாகிவிட்டது. அவரை கட்சியில் வைத்திருப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கவேண்டியது ஐக்கிய தேசியக் கட்சியாகும்'' என்றார்.
அத்துடன், நன்றி மறந்து செயற்படுகின்றீர்கள் என உங்களுக்கு எதிராக ஐ.தே.கவினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள் என்ற வினாவுக்கு, ""என்னைபோல் நன்றியுடையவர் இருக்கமாட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிறையவே நன்றிக்கடன் செலுத்திவிட்டேன். 45 எம்.பிக்களை வைத்திருந்த ஐ.தே.கவின் தலைவரை பிரதமராக்கினேன். நான் நினைத்திருந்தால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. பிரதமருக்கு அதிகாரங்களை வழங்கினேன்'' என்று பதிலளித்தார் ஜனாதிபதி.
Post a Comment