கால்வாயில் பாய்ந்த கார் - மோட்டார் சைக்கிளில் சென்றவர், குதித்து மூவரைக் காப்பாற்றினார்
(ரெ.கிறிஷ்ணகாந்)
மகாவலி – வியானா கால்வாயில் கார் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் மூவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் பண்டாரவளையிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று நேற்றுக்காலை 7. 30 மணியளவில் மாபாகடவெவ 17 ஆம் கட்டை பிரதேசத்தில் மகாவலி வியானா கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர் கால்வாயினுள் குதித்து நீரில் மூழ்கிய மூவரை பிரதேசவாசிகளின் உதவியுடன் காப்பாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற வேளையில் குறித்த காரினுள் திஸ்ஸபுர வித்தியாலயத்தில் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் மூவரும், காரின் சாரதியான, பிபிலை பிரதேசத்திலுள்ள வங்கி ஒன்றில் கடமையாற்றிவரும் நபரொருவரும் இருந்துள்ளனர்.
இவர்களில் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த நளின் காரியவசம் என்ற ஆசிரியர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனவராவார். சம்பவத்தில் உயிர் தப்பிய கே.டி. இனோகா தில்ருக் ஷி என்ற பண்டாரவளையைச் சேர்ந்த ஆசிரியை காயமடைந்த நிலையில் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், காரை செலுத்திச் சென்ற வங்கி உத்தியோகத்தரும், அக்காரில் பயணித்த ஆசிரியர்களுள் ஒருவரான அவரது சகோதரனும் நீந்தியவாறு பிரதேசவாசிகளின் உதவியுடன் கரைசேர்ந்துள்ளனர்.
தனது உயிரையும் பொருட்படுத்தாது கால்வாயினுள் பாய்ந்து இவர்களை காப்பாற்றிய நபர் டீ. எம். கெலும் என்ற மீனவர் ஒருவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மகாவலி – வியானா கால்வாயில் அடிக்கடி இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதனால் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான அவ்வீதியின் 5 கிலோமீற்றருக்கு இருமருங்கிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுவருகின்றன.
எனினும், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதியில் இரும்பு பாது காப்பு வேலிகளை அமைக்கும் பணிகள் தாமதமடைவதால் இவ்வாறான விபத்துகள் இடம்பெறுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மஹியங்கனை பொலிஸார், மாபாகடவெவ பொலிஸ் பயிற்சி பாடசாலையின் உயிர்காப்பு படை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் நீரினுள் வீழ்ந்த காரை கரையேற்றியிருந்தனர்.
இந்நிலையில், மஹியங்கனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகேயின் ஆலோசனைக்கமைய மஹியங்கனை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து காணாமல்போன நபரை தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
Post a Comment