Header Ads



முஸ்லிம்கள் தமது அர்ப்பணிப்பை, தொடர்ந்தும் வழங்க வேண்டும் - தேசிய சூறா சபை


நமது தாய்நாட்டின் 70ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இத்தருணத்தில் இலங்கையர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தேசிய சூறா சபை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறது.

ஒவ்வொரு மனிதனையும் அல்லாஹ் படைத்து பரிபாலித்து வருகிறான் என்ற வகையில் அவனுக்கு மட்டுமே மனிதன் அடிமையாக இருக்க வேண்டும், சகலவிதமான அடிமைத் தழைகளில் இருந்தும் அவன் விடுபட்டு, விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக வாழ வேண்டும்.இந்தப் போதனையை இஸ்லாம் உலகுக்கு வழங்கியது. வரலாற்றில் அதனை நடைமுறைபடுத்தியும் காட்டியது.

இந்தவகையில் எந்த மனிதனும் இன்னொரு மனிதனை அடிமைப்படுத்துவதோ, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதோ, ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமிப்புச் செய்வதோ மனித நாகரிகத்துக்கு இழுக்கானவைகள் என இஸ்லாம் கருதுகிறது.மனிதனும் அப்படியான ஒரு சுதந்திரத்த விரும்புகிறான்.

சுதந்திரவானாக வாழ்தல் என்ற மனிதனின் இந்த இயல்பான உணர்வை இஸ்லாம் மதிக்கின்றது. மேலைத்தேய காலனித்துவத்தின் கீழ் வாழ முடியாது என்ற இந்தச் சுதந்திர உணர்வு மேலோங்கியமையால் தான் இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்ளும் பிரதான பங்காளிகளாக மாறினார்கள். எமது தலைவர்களான ரீ.பீ.ஜாயா,டாக்டர் கலீல்,சேர் ராசிக் ஃபரீட்,பதியுத்தீன் மஹ்மூத் போன்றவர்கள் தம்மால் முடிந்த அளவிலான உச்ச கட்ட பங்களிப்பை இதற்காக வழங்கினார்கள். சுதந்திரமடைதல் என்பதற்கு நிகராக வேறெதனையும் அவர்கள் விலைமதிப்பானதாகக் கொள்ளவில்லை. எமக்கான உரிமைகள், எமக்குரிய பங்குகள் என எதனையும் முன்வைத்து சுதந்திரமடைதலைச் சிக்கலானதாக மாற்றுவதற்கு அவர்கள் விரும்பவில்லை. சுதந்திர இலங்கையின் சக இனத்தவர்களுடன் நல்லிணக்கத்துடன் சகவாழ்வு வாழ்வதைனையே அவர்கள் போற்றினார்கள்.

ஆனால், ஒருசில தீயசக்திகளின் ஊடுருவல் காரணமாக சுதந்திரமடைந்து 70 வருடங்களாகியும் கூட நாட்டின் முன்னேற்றத்தையே பாதிக்கின்ற அளவுக்கு நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் அருகி உறவுகள் விரிசலடைந்திருக்கின்றன. இது நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னோக்கிய வளர்ச்சிக்கும் நாட்டின் பிரஜைகளுக்கிடையிலான நல்லுறவுக்கும் சவாலாக மாறி வருகின்றது.

சுதந்திரம் என்பது ஒரு நாடு மற்றொரு நாட்டின் பிடியில் இருந்து விடுதலையாகுவது என்பது மட்டுமன்றி ஆக்கிரமிப்பாளரின் பண்புகளான பிரிதாளும் கொள்கை, சுயநலம், சுரண்டல், இனவாதம், பிரதேசவாதம், மேலாதிக்க உணர்வு, கொள்கைத் திணிப்பு போன்ற அனைத்திலிருந்தும் விடுதலையாகுவதாகும்.இப்பண்புகளோடு தான் நாம் 70 வருடங்கள் கழிந்த பின்னரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றால் வெளிநாட்டவர்களிடமிருந்து நாடாளுமன்ற ஆட்சி எமக்கு கைமாறி இருக்கிறது என்ற மாற்றம் மட்டுமே நிகழ்ந்தததாகக் கொள்ள முடியும்.உடலளவில் அவர்கள் வெளியேறினாலும் யதார்த்தத்தில் இன்னும் எமக்குள் வாழ்கிறார்கள் என்பதே பொருளாகும்.எனவே,மனப்பாங்கு மாற்றம் நிகழாமல் சுதந்திரக் கொண்டாட்டம் அர்த்தமுள்ளதாகமாட்டாது.

அதேவேளை, சுதந்திரத்துக்காகப் போராடிய எமது தலைவர்களது வழியில் நின்று நாட்டின் நல்லிணக்கத்துக்காகவும் சகவாழ்வுக்காகவும் இலங்கை முஸ்லிம்கள் தமது அர்ப்பணிப்பான பங்களிப்பை தொடர்ந்தும் வழங்க வேண்டும் என தேசிய சூறா சபை இந்நாட்டு முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்கிள்கிறது.

அதுபோலவே நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் நாட்டில் வாழும் சகல இனத்தவர்களையும் பரஸ்பரம் மதித்து மத நல்லிணக்கத்தோடும் சகோதரத்துவ வாஞ்சையோடும் நாட்டுபற்றோடும் தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் அர்ப்பணத்தோடும் செயல்பட வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறது.

மக்களுக்கிடையிலான ஐக்கியம் ஒன்றே நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்குவதற்கான சிறந்த சாதனம் என்ற வகையில், இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் ஐக்கியத்துக்காக உழைப்பதற்கு ஒன்றுபடுமாறு இந்தச் சுதந்திர தினத்தில் தேசிய சூறா சபை முஸ்லிம் சமூகத்துக்கு அறைகூவல் விடுகிறது.

No comments

Powered by Blogger.