சிங்களவர்களும், முஸ்லிம்களும் குரோதத்துடன் பார்க்க வேண்டாம் - அனுரகுமார
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.பி.வி.) அரசியலில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் இந்நாட்டில் இன ரீதியிலான மோதல் ஒன்று ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லையெனவும், இதற்கான உத்தரவாதத்தை மக்கள் முன்னிலையில் ஜே.வி.பி. வழங்குவதாகவும் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கஹட்டோவிட்ட, ஓகொடபொலவில் நேற்று இரவு இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வாக்குறுதியை வழங்கினார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இதன்பிறகு இந்த நாட்டிலுள்ள சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஒருபோதும் ஒருவரையொருவர் குரோதத்துடனும், சந்தேகத்துடனும் பார்க்க வேண்டாம். நாம் அனைவரும் ஒன்றாக நின்று நாட்டின் பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்போம். நாட்டில் யாரும் அடித்துக் கொள்ள வேண்டாம். அடித்துக் கொள்ளுமாறு கூறினால், அவ்வாறு கூறும் அரசியல் தலைவர்களுக்கு முதலில் காலி முகத்திடலில் வந்து மோதிக் கொள்ளுமாறு கூறுவோம்.
மோதிக் கொள்ளச் சொல்லும் இரு சமூகங்களினதும் அரசியல் தலைவர்கள் ஒரே மேசையில் உட்கார்ந்து உணவு பரிமாறுகின்றார்கள். கட்டித் தழுவிக் கொள்கின்றார்கள். கீழ் மட்டத்திலுள்ள சாதாரண அப்பாவி பொது மக்கள் தான் பழிக்கடாக்களாக்கப்படுகின்றார்கள்.
எம்மை கட்சிகளாகவும், இனங்களாகவும் பிரித்து எம்மிடையே பிரச்சினையை ஏற்படுத்தி அதன்மீது எமக்கு மேல் உள்ளவர்கள் ஆட்சி பீடம் ஏறுகின்றார்கள். கடந்த 70 வருடங்களாக இவ்வாறு தான் நாட்டில் ஆட்சி நடைபெறுகின்றது.
உயர் பதவிகளிலுள்ளவர்களின் பிள்ளைகள் எல்லோரும் வெளிநாடுகளில் கல்வி பயில்கின்றார்கள். நோய் வந்தால் சிகிச்சை பெற வெளிநாட்டு மருத்துவமனைகளை நாடுகின்றார்கள். அனைத்தையும் அவர்கள் சுரண்டிக் கொள்கின்றார்கள். அவர்களை அந்த உயர்பதவிகளுக்கு அமர்த்தியவர்களுக்கு எதனையும் வழங்காது ஏமாற்றுகின்றார்கள். இந்நிலைமை அரசியலில் மாற வேண்டும் என்றார்.
Post a Comment