யாழ் சர்வதேச முஸ்லிம் சமூகம் விடுக்கும், இலங்கையின் 70 வது சுதந்திரதின செய்தி..!
எமது இலங்கை திருநாட்டின் 70 வது சுதந்திர தினம், அதாவது நமது நாடு சுதந்திரம் பெற்று 70 வருடங்கள். ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் எம் தேசத்தின் தலைநகர் அலங்கரிக்கப்பட்டு அரச தலைவரின் தலைமையில் நடைபெறும் ஒரு சம்பிரதாயபூர்வ தேசிய கொண்டாட்டத்தில் நாம் திளைத்திருக்கும் அதேநேரம், ஒரு மென்மையான எதேச்சதிகார ஆட்சி ஊடாக சிங்கப்பூர் என்ற ஒரு தேசம் எழுச்சி கண்டமை பற்றியும், பெயரளவில் ஜனநாயகத்தைக் கொண்டிருந்த எம்தேசம், சமூக நலன் பேணுதல் நடவடிக்கை மூலம் பிரித்தானிய ஆட்சியில் திரட்டப்பட்டிருந்த மூலதன திரட்சியை இந்த 70 ஆண்டுகளில் எவ்வாறு வீணாக்கியது என்பது பற்றியும் எம்மக்கள் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
1962 இல் இலங்கையின் தலாவருமானத்தில் US$ 300 ஐ அதிகமாக கொண்டிருத்த சிங்கபூர் 2016 வரை US$ 52,960.71 ஐ எட்டி 175 மடங்கு அதிகமாகப் பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது. இலங்கையும் சிங்கபூரும் பன்மைச் சமூகத்தைக் கொண்டிருந்த போதும் சிங்கபூர் லீ-குவான் - யூவின் அரசியல் பொருளதார தலைமைத்துவத்தின் மூலம் எவ்வாறு ஒரு வகை மென்மையான சர்வதிகார ஆட்சியை மேற்கொண்டு பொருளதார அரசியல் வளர்ச்சியை அடைந்தது என்பதை அறிந்துகொள்ள இத்தினத்தில் உறுதிபூணுவோம்.அதேநேரம் இலங்கையின் அரசியல் தலைவர்களோ கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் பாழாக்கி சமூக நலன் பேணும் பொருளதாரக் கொள்கையை பின்பற்றித் தங்கள் அரசியல் பலத்தைத் தக்கவைப்பதில் கருத்தூன்றினார்களே தவிர, நாட்டின் ஒட்டு மொத்த நன்மை பற்றி சிந்தியாது செயற்பட்டார்கள் என்பதையும், அரச வருமனத்தைத் தம் சுயநல நோக்கத்திற்காக பயன்படுத்தினார்கள் என்பதையும், அத்தகைய நடவடிக்கைகளின் காரணமாகவே எம்தேசம் அரசியல் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியை நோக்கிக்கொண்டு சென்றுகொண்டிருப்பதை உணர்ந்து சுதாகரித்துக் கொள்வதற்கும் இத்தினத்தில் உறுதிபூணுவோம்.
சிங்கபூரில் லீ-குவான் யூவின் தலைமைத்துவம் எவ்வாறு அந்நாட்டைப் பொருளாதார அரசியல் அபிவிருத்தி செய்ததோ அதை ஒத்த தலைமைத்துவம் ஒன்று இலங்கைக்குத் தேவை என்றும் அத்தகைய தலைமைத்துவத்தினால் இலங்கை பொருளாதார அரசியல் உறுதிப்பாட்டை அடையும் என்பதை 70 ஆண்டுகள் கடந்தும் நாம் கற்றுக்கொள்ள தவறியுள்ளோம். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமூக நடவடிக்கைகள் பொருளாதார அபிவிருத்தியைத் தடை செய்யவும், பின்னடைவைச் செய்யும் வகையிலும் ஓரினச் சார்புத் தன்மை அடிப்படையிலும், இனங்களுக்கிடையே முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் அந்நிய சமூகத்துக்கு நாட்டின் இறைமையை விற்கும் வகையிலும் அமைந்திருந்ததே உண்மை. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரச ஆதரவுக் குடியேற்றத்திட்டங்கள் இன முரண்பாட்டை மேலும் மோசமடையச் செய்யும் பண்பு கொண்டதாக அமைந்திருக்கின்றன என்றே நாம் கருதுகிறோம். அரசின் வருமானம் அரசியல்வாதிகளின் வாக்கு வங்கிகளைத் தக்கவைக்கும் வகையில் சுயநலநோக்கிற்காகத் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்புச் செலவுகளில் அதிகரிப்பு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை அதள பாதாளத்திற்கு கொண்டு சென்றுவிடும் என்பதும் எங்கள் ஆரோக்கியமான அபிப்பிராயமாகும். இது சமூக நலன்புரிச் செலவிலிருந்து பாதுகாப்புச் செலவு நோக்கி அமைகின்றது.
ஒரு நாட்டின் சமூக, மற்றும் அரசியல் காரணிகள் அந்நாட்டின் அபிவிருத்தியில் கணிசமான பங்கினைக் கொண்டுள்ளன. சிங்கப்பூர் எவ்வாறு இந்தப் பொருளாதாரமில்லாத சமூக, அரசியல் காரணிகளை அபிவிருத்தி சார்பாகப் பயன்படுத்தி வெற்றி கண்டது என்பதிலிருந்து இலங்கையின் ஆட்சியாளர்களும், கொள்கை வகுப்பாளர்களும் கற்றுக்கொள்ளவேண்டும்.
சிங்கப்பூருக்கு லீ-குவான் யூவினால் வழங்கப்பட்ட அரசியல், பொருளாதாரத் தலைமைத்துவம், தலைவன் தன்னலம் கருதாது நாட்டு மக்கள் அனைவரினதும் பொதுநலனை முதன்மைப்படுத்திச் செயற்படும் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இதையே பிளேட்டோ, அரசியல் தலைவர் a Philosopher king ஆக இருக்கு வேண்டுமென்றார். ஆயினும், ஆட்சித் தலைமைகளுக்கு சாமரம் வீசும் ஆலோசகர்கள், அறிவு ஜீவிகள் இவற்றை ஏற்படுத்துவதென்பது சாத்தியமாகாது. உண்மையை அவர்கள் எடுத்துரைத்தால் அவர்கள் அனுபவிக்கும் அரசியல் இலாபங்களை இழக்க நேரிடும், ஆனால் மக்கள் இதில் தெளிவுறல் வேண்டும்.
பேரினவாதத்தில் மூழ்கியிருக்கும் அரசியல் தலைவர்களுக்கு எமது செய்தி கசப்பானவையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நல்லாட்சி, ஊழல் அற்ற அரசு குடும்ப ஆட்சி ஒழிப்பு, சட்ட ஆட்சி, சுயாதீனமான இயங்குதிறன் கொண்ட ஆணைக்குழுக்கள், அரச கரும மொழி மாற்றம், மதத்தை அரசியலில் இருந்து பிரித்து வைத்தல் என்பன எல்லாம் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சகல இன, மத, மொழி, பண்பாடுடைய மக்களை சமத்துவமான முறைமையில் ஒன்றிணைந்து வாழ வைக்கும் என்பதில் உண்மையில் நாட்டை நேசிக்கும் மக்களிடம் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது என்பதே எமது யாழ் சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் திடமான நம்பிக்கையாகும்.
யாழ் சர்வதேச முஸ்லிம் சமூகம்
தலைமையகம் - பிரான்ஸ்
Post a Comment