70 வது சுதந்திர தினத்தில், வரலாற்று சிறப்புமிக்க 2 சம்பவங்கள் நடந்தன - துமிந்த
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் அரசாங்கத்தின் கீழ் மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதியாக இருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியா அட்டவோகஸ்கட பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் 70வது சுதந்திர தினத்தில் வரலாற்று சிறப்புமிக்க இரண்டு சம்பவங்கள் நடந்தன. பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன் அலோசியஸ் மற்றும் மிக் விமான கொள்வனவு தொடர்பான ஊழலில் தொடர்புடைய ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருடர்கள் தொடர்பாக தற்போதைய ஜனாதிபதி கூறியதை நடந்து வருகிறது.
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி. அதேபோல் 2020 ஆம் ஆண்டு வரை நாங்கள் இந்த தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்போம்.
2020ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கம் ஆட்சியமைக்கும். யார் என்ன கூறினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேனவையே மீண்டும் ஜனாதிபதி பதவியில் அமர வைப்போம்.
இதனால், மக்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கைகோர்த்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment