6000 வீரர்களைக் கொண்ட படையணி தயார், அனைவர் கையிலும் ஆயுதங்கள்
எதிர்வரும் சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் நடை பெறும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை அமைதியான முறையில் நடாத்தி முடிக்க விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொலிஸ், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர், கலகத்தடுப்பு பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், முப்படையினரை உள்ளடக்கியதாக இந்த பரந்த பாதுகாப்பு கட்டமைப்புடன் கூடிய நடவடிக்கை எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளன.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் 4178 பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 65758 பொலிஸ் அதிகாரிகள், உத்தியோகத்தர்களைக் கொண்ட படையணி கடமையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர்கள் இன்று அந்தந்த பொலிஸ் அத்தியட்சர் பிரிவுகளுக்கு சென்று கடமைகளைப் பொறுப்பேற்று 9 ஆம் திகதி முதல் தேர்தல் கடமைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் பணியில் ஈடுபடுவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இவர்களில் பொலிஸ் விஷேட அதிரடிப்படை வீரர்களுக்கு மேலதிகமாக பொலிஸ் கலகமடக்கும் பிரிவின் வீரர்கள் 1106 பேரும் பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர்கள் 1320 பேரும் உள்ளடங்குவதாகவும் இவற்றுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாபபு திணைக்களத்தின் 5953 பேர் கொண்ட படையணியினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, இந்த விஷேட பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் முகமாக அடையாளம் காணப்பட்ட 155 இடங்களில் இராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் 855 முப்படை வீரர்கள், பாதுகாப்புப் படையணிகளின் கட்டளைத் தலைமையகத்தின் வழி நடத்தலில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.
இதனைவிட அவசர நிலைமையொன்றினை எதிர்கொள்ளும் விதமாக மேலும் 6000 முப்படை வீரர்களைக் கொண்ட பாதுகாப்பு படையணி நாடளாவிய ரீதியில் பல இடங்களை மையப்படுத்தி நிலைகொள்ள செய்யப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் சுமித் அத்தபத்து மேலும் கூறினார்.
( எம்.எப்.எம்.பஸீர்)
Post a Comment