உங்கள் அமைதியினாலேயே, நாங்கள் கொல்லப்படுகிறோம் - நஜீம் எனும் 15 வயதுச் சிறுவன் குமுறல்
சிரியாவில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள கெளத்தா பகுதியே அதிகளவு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் 30 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சில மணி நேரங்களின் பின் அந்த பிராந்தியத்தின் மீது சிரிய அரச படை தரைவழி மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி வருவதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இடம்பெறும் யுத்த அவலங்களை, கிழக்கு கௌத்தாவைச் சேர்ந்த மொஹமட் நஜீம் எனும் 15 வயதுச் சிறுவன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறான்.
குறிப்பாக ட்விற்றர் வலைத்தளத்தில் பதிவிடும் குறித்த சிறுவனை (@muhammadnajem20), இதுவரை சுமார் 12 ஆயிரம் பேர் தொடருகின்றனர்.
அங்கு நிலவும் உணவுத் தட்டுப்பாடு, சிறுவர்கள் கொன்றழிக்கப்படுவது உள்ளிட்ட விடயங்களை அச்சிறுவன் பகிர்ந்து வருகிறான்.
சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் எங்கள் குழந்தைகளை கொல்வதாகவும், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கும் அவனது வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் அமைதியினாலேயே நாங்கள் கொல்லப்படுகிறோம் என அச்சிறுவன் தனது வீடியோவில் உருக்கமாக தெரிவித்துள்ளதோடு, காலம் கடப்பதற்கு முன்னர் எங்களை காப்பாற்றுங்கள் எனவும் தெரிவித்துள்ளான்.
"எங்கள் சிறுவர் பருவத்தை பஸர் அஸாத், புட்டின், கொமைனி ஆகியோர் சிதைத்துள்ளனர்."
Post a Comment