முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய 10 எம்.பி.க்கள் - இது தற்காலிக தீர்வே
தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடுத்து தனித்து அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது அந்த முயற்சியை கைவிட்டு தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு சுதந்திரக் கட்சி நேற்று முன்தினம் இரவு தீர்மானித்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று பகல் நடைபெற்ற விசேட மற்றும் அவசர சந்திப்பின்போது ஜனாதிப தியின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய அரசாங்கத்தில் நீடிக்க தீர்மானித் துள்ளது.
நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வு நடைபெற்ற நிலையில் பாராளுமன் றத்துக்கு செல்லாமல் 12 மணிக்கு சுதந்திரக் கட்சியின் அனைத்து பாராளு மன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.
அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி செயலகத்தில் நீண்டநேரம் கலந்துரையாடியிருந்தனர். அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த தயாசிறி ஜயசேகர டிலான் பெரெரா ஜோன் செனவிரட்ன நிமால் சிறிபால டி. சில்வா உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இந்த அவசர சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது தனித்து அரசாங்கம் அமைக்கும் செயற்பாட்டை கைவிட்டு தேசிய அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொண்டு தேசிய அரசாங்கத்தில் நீடிப்பது என்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சந்திப்பில் ஜனாதிபதி சுதந்திரக் கட்சியின் எம்.பி. க்களுக்கு நீண்ட விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.
குறிப்பாக பிரதமரை சட்டரீதியாக பதவியிலிருந்து நீக்குவதில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் தேசிய அரசாங்கம் பயணிக்கவேண்டியதன் அவசியம் என்பன குறித்து ஜனாதிபதி சுதந்திரக் கட்சி எம்.பி. க்களுக்கு விளக்கியுள்ளார். விசேடமாக சர்வதேச சவால்களை வெற்றிகொள்ள தேசிய அரசாங்கம் நீடிக்கவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி தெ ளிவுபடுத்தியுள்ளார். இதனையடுத்தே தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடனான சந்திப்பு முடிந்தவுடன் வெ ளியே வந்த அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நல்லிணக்கம் சமாதானம் மற்றும் அமைதி என்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதியை பலப்படுத்த தீர்மானித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதன்மூலம் சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி தலைமையிலான தேசிய அாசாங்கத்தில் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளளனர். இதேவேளை தமது கட்சியிலுள்ள உறுப்பினர்களை பாதுகாக்கும் முயற்சியிலும் சுதந்திரக் கட்சியின் தற்போது ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி மஹிந்த ராஜபக்ஷவின் தரப்புடன் இணைந்து அரசாங்கம் அமைக்குமாயின் தாம் அதில் இடம்பெறமாட்டோம் என சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட சுமார் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அவ்வாறு சுதந்திரக்கட்சியானது மஹிந்த தரப்புடன் இணையுமானால் தாம் ஐக்கிய தேசியகட்சிக்கு செல்லும் முடிவில் இந்த எம்.பிக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுவதால் தற்போது சுதந்திரக்கட்சி பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நிலையில் தற்போது குறுகிய காலத்துக்கு இவ்வாறு தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி 113 எம்.பி.க்களை பெற்றுக்கொள்வதிலும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில் தனித்து அரசாங்கம் அமைக்கும் முயற்சியை சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கைவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் நாளை, அல்லது நாளை மறுதினம் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதன்போது முக்கியத்துவம் மிக்க அமைச்சுக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தற்போது சுதந்திரக்கட்சி அவதானம் செலுத்தியுள்ளது.
சட்டம் ஒழுங்கு அமைச்சு, நிதி அமைச்சு போன்றவற்றை தம்மிடம் எடுத்துக்கொள்ளும் நோக்கில சிறிலங்கா சுதந்திரக்கட்சி தற்போது ஆராய்ந்து வருகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற நலையில் சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைக்கவேண்டுமானால் அக்கட்சியே பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சி கூறிவருகின்றது.
இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியானது இதுவரை 113என்ற பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போயிருக்கின்றது. அதன்படி தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதற்கு சுதந்திரக் தீர்மானம் எடுத்துள்ளது.
அது மட்டுமின்றி புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்தின் அபிப்பிரயாத்தை கோரவுள்ளதாகவும் சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது அரசாங்கத்தை அமைத்தல் மற்றும் பெரும்பான்மையை நிரூபித்தல் போன்ற சர்ச்சைமிக்க விடயங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்க்கப்பட்டபோதும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. மாறாக தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் விவாதம் நடத்தப்படவேண்டும் என்ற சர்ச்சையே எழுப்பப்பட்டதுடன் பின்னர் மாலை 4 மணிமுதல் 7 மணிவரை விவாதம் நடைபெற்றது.
கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெளியான முடிவுகளின் பின்னர் தேசிய அரசாங்கத்தில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி வகிக்கின்ற அரசாங்கத்தில் தாம் இருக்கமாட்டோம் என்று சுதந்திரக் கட்சி தெரிவித்ததையடுத்து பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பிரதமர் பதவி விலகுவதற்கு மறுத்துவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தொடர்ந்தும் தனித்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துவந்தன. இதனிடையே கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகரையும் பிரதமரையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்த சந்திப்புக்களின்போது தேசிய அரசாங்கத்தை நீடித்துச் செல்ல இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும் ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்குவது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறனெினும் தற்போது தற்காலிகமாக தேசிய அரசாங்கத்தை நீடித்துக்கொண்டு செல்ல தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment