இந்திய அரசு ஹாஜிகளுக்கு, பிச்சை போட வேண்டியதில்லை -TNTJ
ஹஜ் பயணம் செல்வோருக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட மானியமாக வழங்குவதில்லை. மாறாக ஒவ்வொரு ஹஜ் பயணியிடமிருந்தும் பல்லாயிரம் ரூபாய்களை மத்திய அரசு சுரண்டி கொள்ளையடிக்கின்றது என்பதே உண்மையாகும்.
சவூதி அரசாங்கம் இந்திய முஸ்லிம்களில் எத்தனை பேருக்கு விசா வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதோ, அதில் எழுபது சதவிகிதம் பேரை ஹஜ் கமிட்டி மூலம் மத்திய அரசு அனுப்பி வைக்கிறது. மீதி முப்பது சதவிகிதம் பயணிகள் அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் செய்வோர் அதற்கான கட்டணமாக 1.80,000 (ஒரு லட்சத்து என்பதாயிரம்) ரூபாய்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
சவூதியில் இறங்கியது முதல் திரும்பும்வரை ஏற்படும் உணவு உள்ளிட்ட ஹாஜிகளின் செலவுகளுக்காக 34 ஆயிரத்தை ஜித்தாவில் இறங்கிய உடன் ஹாஜிகளின் கையில் தருவார்கள்.
இதைக் கழித்தால் ஹாஜிகள் செலுத்தும் தொகை 1,46,000 (ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம்) ரூபாய்கள்.
விமானத்திற்கான அதிகபட்சக் கட்டணம் : 25,000
மக்காவில் தங்கும் வாடகை : 50,000
மதீனாவில் தங்கும் கட்டணம் : 20,000
மக்காவில் ஹஜ் வழிகாட்டி கட்டணம், வாகனங்களில் பல இடங்களுக்கும் அழைத்துச் செல்லுதல் கட்டணம் வகைக்காக 25.000
ஆக ஹஜ் பயணிகளுக்கு ஹஜ் கமிட்டி மூலம் செலவிடும் தொகை 1,20,000 ரூபாய்கள்தான் ஆகிறது.
அதாவது ஒவ்வொரு ஹஜ் பயணியிடமிருந்தும் மத்திய அரசு அடிக்கும் கொள்ளை சுமார் 25 ஆயிரம் ரூபாய்கள்.
இது தவிர விமானக் கட்டணத்தின் மூலம் கிடைக்கும் லாபம் வேறு உள்ளது.
இதில் அரசாங்கத்தின் மானியத்துக்கு எந்த வேலையும் இல்லை.
ஹஜ் பயணத்துக்கான அனுமதியை வழங்கிவிட்டு அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டால் ஒவ்வொரு ஹஜ் பயணிக்கும் 25 முதல் முப்பதாயிரம் ரூபாய்கள் மிச்சமாகும்.
அப்படியானால் மானியம் என்ற பிரச்சனை எப்படி வருகின்றது?
ஹஜ் கமிட்டி மூலம் பயணம் செய்பவர்கள் இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா, சவூதி அரசுக்குச் சொந்தமான சவூதி ஏர்லைன்ஸ் ஆகிய இரு விமானங்களில் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள்.
ஏர் இந்தியாவிடம் போதிய விமானம் இல்லாவிட்டால் பிற நாட்டு விமானங்களை அடிமாட்டு கட்டணத்துக்கு ஏர் இந்தியா வாடகைக்கு எடுக்கும். அதை ஏர் இந்தியா பெயரில் இயக்கும். அதில் தான் பயணிக்க வேண்டும்.
ஹஜ் நேரத்தில் விமானக் கட்டணத்தை 25 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்துவார்கள். இந்தக் காலகட்டத்தில் மற்ற விமானங்களில் 20 ஆயிரமே கட்டணமாக இருக்கும். ஆனால் ஹஜ் கமிட்டி மூலம் தேர்வானவர்கள் அந்த விமானங்களில் பயணிக்க அனுமதி இல்லை.
அதாவது விமானக் கட்டணம் 25 ஆயிரத்தை ஒரு லட்சமாக உயர்த்துவதால் நம்மிடம் வாங்கிய தொகையில் மீதமிருந்த 25 ஆயிரத்தையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஹஜ் பயணிக்காகவும் ஏர் இந்தியாவுக்கு (அதாவது தனக்குத்தானே) அரசு ஐம்பதாயிரம் ரூபாய்களை மானியம் என்ற பெயரில் வழங்கும். ஹாஜிகளுக்கு வழங்காது.
மானியம் என்பது ஹஜ் பயணிகளுக்கு அல்ல. இந்திய அரசின் விமான நிறுவனத்துக்குத்தான். அதைத்தான் ஹஜ் மானியத்துக்கு இந்திய அரசு கோடிக்கணக்கில் செலவிடுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களையும், முஸ்லிமல்லாத மக்களையும் ஒரே நேரத்தில் மூடர்களாக்கி வருகிறார்கள்.
ஏர் இந்தியாவின் வருமானத்தைப் பெருக்க ஒவ்வொரு ஹாஜியிடம் இருந்தும் கூடுதலாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்களை ஏமாற்றிப் பறித்துக் கொண்டு மானியம் வழங்குவதாகக் கூறுவது பச்சை அயோக்கியத்தனமாகும்.
மேலும் ஹஜ் பயணிகளில் பாதிப் பேர் ஏர் இந்தியா மூலம் பயணம் செய்தால் மீதிப் பேர் சவூதி ஏர் லைன்ஸ் மூலம் பயணிக்கிறார்கள். பாதி மானியத்தை சவூதி ஏர் லைன்ஸுக்கு வழங்க வேண்டுமல்லவா? அப்படி வழங்குவதில்லை.
செய்யாத பயணத்துக்கான பொய்யான அந்த மானியத்தையும் ஏர் இந்தியாவே அதாவது இந்திய அரசே எடுத்துக் கொள்கிறது.
புனிதப் பயணம் மேற்கொள்ளும் மக்களிடம் இப்படி கொள்ளையடிக்கும் நாடுகள் உலகில் எங்குமே இருக்காது.
கொள்ளையும் அடித்து விட்டு மானியம் அளிப்பதாகக் கூறும் நாடுகளும் உலகில் இருக்காது.
அனைத்து மக்களுக்குமான வரிப்பணத்தில் இருந்து இந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை. அது தேவையும் இல்லை என்பதை இதிலிருந்தே அறியலாம்.
இந்தக் கேடுகெட்ட மானியத்தை முஸ்லிம்கள் கேட்கவும் இல்லை. எனவே இந்தப் போலி ஹஜ் மானியத்தை ஒழித்துக் கட்டினால் அது முஸ்லிம்களுக்கு நன்மைதான்.
ஏர் இந்தியாவில்தான் பயணிக்க வேண்டும் என்ற கொள்ளை அடிக்கும் கொள்கையைக் கைவிட்டு, ஹாஜிகள் தமக்கு விருப்பமான எந்த விமான சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டு மானியத்தை நிறுத்தட்டும். அப்படிச் செய்தால் முஸ்லிம்கள் அதைப் பெரிதும் வரவேற்பார்கள்.
டிரான்சிட் முறையில் பயணித்தால் 15 ஆயிரம் கட்டணத்தில் ஜித்தா போக முடியும். பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்தால் இன்னும் குறைந்த கட்டணத்தில் புனிதப் பயணம் செய்து ஒவ்வொரு ஹாஜியும் முப்பதாயிரத்துக்கு மேல் மிச்சப்படுத்த முடியும்.
போலி ஹஜ் மானியம் ஒழிக்கப்படுவதோடு ஹாஜிகளின் பணத்தைக் கொல்லைப் புறமாக மத்திய அரசு சுரண்டுவதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச் செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
Post a Comment