தொழிலதிபர் MSM. முபாறக்கின் உணர்ச்சிமிகு பேச்சு...!
பள்ளிவாசல்களை நக்கலாக பேசுவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த தொழிலதிபர் எம்.எஸ்.எம்.முபாறக், அதற்காகவேனும் தாங்கள் ஒன்றுபடவேண்டிய தேவையிருப்பதாகவும் மற்றவர்களைப்போல் யாரையும் வசைபாடாத அரசியலைச் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சிசபை என்ற பணியகத்தின் சார்பில் எதிர்வரும் தேர்தலில் சுயட்சையாக 20 இலக்க வட்டாரத்தில் போட்டியிடும் எம்.வை.எம்.ஜௌபருக்கான தேர்தல் அலுவலகத்தை 2018-01-12 ஆம் திகதி சாய்ந்தமருது கடற்கரை வீதியில் திறந்துவைக்கும் நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே தொழிலதிபர் முபாறக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பள்ளிவாசலின் முன்னால் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஒற்றுமையின் அவசியத்தையும் எதிர்கால திட்டங்களையும் மட்டுமே மேடைகளில் கூறுமாறும் மற்றவர்களைப்போல் வசைபாடும் அரசியலைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
இன்னுமொரு சகோதரனின் மானம் சம்மந்தப்பட்ட விடயத்தில் இறைவனைப் பயந்து கருத்துக்களை வெளியிடுமாறும் அரசியலுக்காக பள்ளிவாசல்களை காலின்கீழ் போடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ஊர் ஒன்றுபட்டுத்தான் பள்ளிவாசல்களுக்கான நிருவாகிகளை அமர்த்தியுள்ளதாகவும் அவர்கள் தவறு செய்தால் இறைவன் அவர்களைத் தண்டிப்பான் என்றும் தெரிவித்தார்.
அரசியலுக்காக ஒரு சிலரை மட்டும் முன்னிளைப்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் தீர்வுகள் எட்டப்படும் போது ஊரின் சகல தரப்பினரதும் கருத்துக்களையும் உள்வாங்குமாறும் சகலரும் அவரவர் துறைசார்ந்த விடயங்களில் புத்திசாலிகளே என்றும் தெரிவித்த முபாறக், யாரையும் கழித்துவிட்டு முடிவுகளை எட்ட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
சாய்ந்தமருது மக்களின் எதிர்பார்ப்புக்களை, உணர்வுகளைப் பயன்படுத்தி களத்தில் குதித்துள்ள வேட்பாளர்கள், வெற்றிபெற்றதன் பின்னர் குறிப்பிட்ட சிலர்தான் புத்தியுள்ளவர்கள் ஏனையவர்கள் புத்தியில்லாதவர்கள் என்ற போக்கில் இருந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். எவர் எந்தத் தொழிலைச் செய்கின்ற போதிலும் அவர்களும் ஊரில் அக்கறையுள்ளவர்கள் என்பதை புரிந்து கொள்ளுமாறும் அவர்கள் யாருக்கும் வால் பிடிப்பவர்களோ அல்லது போலியான கொட்டேசன் எடுத்து அதில் வாழ்பவர்களோ அல்ல என்றும் தெரிவித்தார்.
மக்களை ஏமாற்றி வாக்குகளைப்பெற்றுக்கொண்டு அடுத்த அணிகளுக்குச் சென்று நடனமாடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் பள்ளிவாசலை முன்னிலைப்படுத்தி களத்தில் குதித்துள்ள சாய்ந்தமருது சுயட்சை குழுவினர் குறித்த அபிலாஷையை அடைந்து கொள்வதற்காகவே தங்களது பதவிகளை பயன்படுத்துவார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
தனது தகப்பனார் அரசியல் மேடைகளுக்கும் ஏறுவீரா மகனே என்று என்னிடம் அப்போது கேட்டார் என்றும் இல்லையென்றே அப்போது கூறியிருந்தேன் என்றும் ஆனாலும் சாய்ந்தமருதில் ஏற்பட்டுள்ள எழுச்சியைத் தொடர்ந்து இன்று இந்த மக்கள் சந்திப்புக்கு பார்வையாளராகவே வந்தேன் என்றும் கூடியிருகின்ற மக்கள் வெள்ளம் என்னை பேச அழைத்ததன் காரணமாகவே இங்கு உரையாற்றிக்கொண்டிருக்கின்றேன். என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது என்ற எனது தாயை வழிநடத்தும் எங்களது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் முன்பாக அந்தத் தாயின் பிள்ளைகள் எடுத்துக்கொண்ட பிரகடனத்தின் அடிப்படையிலேயே தானும் இங்கு உரையாற்றிக்கொண்டிருப்பதாகவும் எங்களது தலைவர் முகம்மது (ஸல்) அவர்கள் மட்டுமே என்றும் முஸ்லிம்களின் தலைவர் என்று சொல்வதற்கு அதற்கான பண்புகள் அவரிடம் மட்டுமே இருப்பதாகவும் சிலருக்கு அல்லாஹ் தலைமைத்துவங்களைக் கொடுத்திருந்த போதிலும் அந்த கௌரவத்தை பாதுகாக்காது அமானிதங்களை மறந்து தாங்களுக்கு அடையாளம் பெற்றுக்கொடுத்த பள்ளிவாசல்களையே விமர்சிக்கும் அளவுக்கு முற்பட்டிருப்பதன் காரணமாகவே தன்னைப்போன்றவர்கள் மேடையேற வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒரு இஸ்லாமியன் இன்னுமொரு இஸ்லாமியனுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் இதைத்தான் குர்ஆன் போதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தான் தொழில் ரீதியாக தனது தந்தையின் வழிகாட்டலின் கீழ் இறைவனின் உதவியுடன் இவ்வாறான ஹலாலான முன்னேற்றத்தைக்கண்டதாகவும் சிலர் ஹறாமான விடயங்களுடன் தொடர்புபட்டு ஹறாத்தில் இருப்பதாகவும் தெரிவித்த முபாறக், அந்தப்பணத்தில் ஹஜ்ஜுக்கு செல்வதும் ஹறாமே என்றும் தெரிவித்தார். தங்களது வாசிக்காக சில உலமாக்கள் இவைகளை நியாயப்படுத்துவதும் ஹாறாமே என்றும் உண்மைகளை இவர்கள் ஒளிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
எவ்வளவுதான் மேடைகளைப்போட்டு உரையாற்றுகின்ற போதிலும் சாய்ந்தமருதின் தாகத்தின் பொறுமதியை மக்களுக்கு மனங்களில் படும் அளவுக்கு விளங்க வைப்பதனூடாகவே தங்களது எதிர்பார்ப்புக்களை அடைந்து கொள்ள முடியும் என்றும் அதற்காக சகலரும் களத்தில் குதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Post a Comment