Header Ads



ரவியின் சதியில் ஹக்கீம், றிசாத் சிக்கினார்களா..??


“எங்கள் கட்சியை கொழும்பிலிருந்து துடைத்து எறியப்போவதாக, வடக்கு கொழும்பு புளுமெண்டால் வட்டாரத்தில் நடைபெற்ற ஒரு  கூட்டத்தில் கூறியுள்ள ரவி கருணாநாயக்க எம்பியைப் பார்த்து எனக்கு சிரிப்பு வருகிறது. இந்தப் புதிய ஆண்டின் முதல் மகா நகைச்சுவையாக இருக்கிறது” என்று, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற  ஜனநாயக இளைஞர் இணைய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட விளக்க உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில்,

“இந்த ரவி கருணாநாயக்க, இன்று அமைச்சரவையில் இருந்து துடைத்து எறியப்பட்டு விட்டார். இப்போது அவர் தனது சொந்தக் கட்சியில் இருந்தே படிப்படியாக துடைத்து எறியப்பட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் அரசாங்கத்திலிருந்து  முழுமையாக தூக்கி எறியப்படும் சூழலையும் அவர் எதிர்நோக்கியுள்ளார்.  இவை அனைத்தும் அவரே தேடிக்கொண்ட வினைகள் என்பதை முழுநாடும் அறியும். இவற்றுக்கு நான் காரணம் இல்லை.

“இந்நிலையில் என்னையும் என் கட்சியையும் துடைத்து எறியப்போவதாக சொல்லும் அவரது கருத்து, இந்தப் புதிய ஆண்டின் முதல் மகா நகைச்சுவையாக இருக்கிறது. இவரைவிட மிகப்பெரிய கொம்பர்களையெல்லாம் எதிர்கொண்ட எனது வரலாற்றை மறந்துவிட்டு, யாருடன் மோதுகிறோம் என்ற தெளிவில்லாமல் எனக்கு இவர் சவால் விடுகிறார்.

“இவரைப்போன்ற அரசியல் கோமாளிகளின் வெற்று கூச்சல்களையும் கட்டளைகளையும் கேட்டு, பயந்து, வீட்டுக்கு உள்ளேயே முடங்கிவிடும் பழைய தலைமுறையை சார்ந்தவன் நானல்ல என்பதையும் நான் தன்மானமுள்ள ஒரு புதிய தலைமுறை தமிழ் இலங்கையன், கட்சித்தலைவர், கூட்டணி தலைவர், அமைச்சரவை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதையும், இவர் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும். ஆகவே அரசியலில் என்னுடன் விளையாட வேண்டாம் என, நண்பர் ரவி கருணாநாயக்கவுக்கு  கூறுகிறேன்

 “உண்மையில் இன்று ஐக்கிய தேசிய கட்சியுடன் கொழும்பு மாநகர சபை தேர்தலில் கூட்டு சேர்ந்து போட்டியிடும் ஏனைய சிறுபான்மை கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  ஆகிய கட்சிகளின் தலைவர்களையும் ரவி கருணாநாயக்க  கடும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளார்.

“வேட்பு மனுவில் இரவில் கையெழுத்து போட்ட சிலரது பெயர்கள் காலையில் வெட்டி அழிக்கப்பட்டு மாற்று பெயர்கள் புகுத்தப்பட்டுள்ளன. எங்கள் கட்சியும் உடன்பட்டு இவர்களது வேட்பு மனுவில் கையெழுத்திட்டிருந்தால், எங்கள் முக்கியமான வேட்பாளர்களின் பெயர்களும் கடைசி நேரத்தில் இப்படி வெட்டி அழிக்கப்பட்டு இருக்கும். ஏனைய சிறுபான்மை கட்சிகள் இந்த சதியில் சிக்கிக்கொண்டார்கள். நாம் சிக்கவில்லை. இதுதான் உண்மை.   

No comments

Powered by Blogger.