பலாக்காய் அவித்து, எதிர்ப்பை வெளியிட்ட ஊழியர்கள்
(ஆர்.ராம்)
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு 99 வருடங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் 2018ஆம் ஆண்டின் ஆரம்பநாளான நேற்று திங்கட்கிழமை துறைமுக வளாகத்தில் சீன நாட்டுக் கொடி முதற்தடவையாக உத்தியோக பூர்வமாக ஏற்றப்பட்டது. துறைமுக அதிகாரசபை, இலங்கை நாட்டின் தேசியக் கொடி ஆகியவற்றுடன் சீன நாட்டின் கொடியும் ஏற்றப்பட்டிருந்தது.
இதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை அரச தனியார் கூட்டு வேலைத் திட்டத்தின் கீழ் துறைமுகத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, அதனை அபிவிருத்தி செய்வதற்கான இணை ஒப்பந்தம் 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
இவ்வாறான நிலையில் குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக தாம் தொழில் வாய்ப்பினை இழக்க நேரிட்டுள்ளதாகக் கோரி ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் 438பேர் தொடர்ச்சியாக சத்தியாக் கிரகப் போராட்டத்தினை ஹம்பாந்தோட்டை துறைமுகவளாகத்திற்கு அருகில் முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று திங்கட்கிழமையும் 42 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக் கிரகப் போராட்டத்தின் போது அதில் பங்கெடுத்த ஊழியர்கள் புத்தாண்டின் முதல் நாளில் பாற்சோறு உண்ணுவதற்கு பதிலாக பலாக்காய் அவித்து அதனை உண்டு தமது கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இது குறித்து ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் உமேஷ் தெரிவிக்கையில், நாம் ஹம்பாந்தோட்டையை பூர்வீகமாக கொண்டவர்கள். இங்கு துறைமுகம் அமைக்கப்பட்டமையின் காரணத்தாலேயே எமது வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பித்தது. நாம் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றிருந்தோம். ஆனால் தற்போது சீனாவுக்கு துறைமுகத்தை அரசாங்கம் தாரைவார்த்துள்ளது. இதனால் 438பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்து வீதியில் நிற்கின்றோம்.
438பேர் தொழில்வாய்ப்புக்களை இழந்து நிற்கின்றமையால் இந்தப் பிரதேசத்தில் உள்ள 438குடும்பங்களின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது.
இதுவரையில் எமது பிரச்சினைக்கு எந்தவிதமான தீர்வினையும் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வரவில்லை. நியாயமான தீர்வு கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும் என்றார்.
Post a Comment