கணனி ஹெக்கர் இலங்கையிலிருந்து மாயம் - அமெரிக்க, ரஷ்யாவினால் தேடப்பட்டவராம்..!
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவினால் தேடப்படும் முக்கிய குற்றவாளி இலங்கையிலிருந்து திடீரென காணாமல் போயுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் நேரடி அழுத்தத்திற்கு இலங்கை முகங்கொடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வாரத்தில் இலங்கை தேயிலைக்கு ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும் ஆபத்தாக மாறியிருந்தது.
ரஷ்யாவுடன் தொடர்புடைய கணனி ஹெக்கர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டமையே, இந்த தடைக்கு பிரதான காரணமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் அவ்வளவு முக்கியமானவர் என ஆரம்பத்தில் இலங்கை பொலிஸார் அறிந்திராத நிலையில் பணம் தூய்மையாக்கல் தொடர்பில் அவர் வெலிகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மனோக்ஹின் ரவுபோச்சி என்ற ரஷ்ய நாட்டு ஹெக்கர் இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதன் பின்னர் அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு ரஷ்யாவும் அமெரிக்காவும் இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தன.
ரஷ்யாவுடன் தொடர்புடைய பிரதான கணனி ஹெக்கர் என கூறப்படுகின்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை மாற்றுவதற்கும் தொடர்புப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் இலங்கையில் கைது செய்யப்பட்ட குறித்த ரஷ்ய நாட்டவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் தனது குடும்பத்துடன் காணாமல் போயுள்ளார். அவரது கடவுச்சீட்டு இலங்கை நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள நிலையில் அவர் ரஷ்ய விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்ய நாட்டவரை ரஷ்யாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த வருடம் ஜுலை மாதம் கோரிக்கை விடுத்த போதிலும் இலங்கை சட்டமா அதிபர் தாமதப்படுத்தி விட்டதாக ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய விமானத்தில் அவர் தப்பி சென்றதாக கூறப்படும் கருத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.
எனினும் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதியின் பின்னர் அவருக்கு என்ன நடந்ததென தகவல் இல்லை என இலங்கை சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவினால் இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்ட தேயிலைத் தடை, உயர்ந்தமட்ட ராஜதந்திர நடவடிக்கையின் காரணமாக இல்லாமல் செய்யப்பட்டது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக தலையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment