Header Ads



இந்நாட்டின் உண்மையான, விசுவாசிகள் முஸ்லிம்களே - இம்தியாஸ் பாக்கீர்

இலங்கை முஸ்லிம்கள் சுதந்திரத்திற்கு முன்னரும் - சுதந்திரத்திற்கு பின்னரும் இந்த நாட்டுக்கு உண்மையான விசுவாசிகளாகவே இருந்துள்ளனர். இதுவே  எமது வரலாறு. நாங்கள் எமது வரலாற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் அத்துடன் மற்றவர்களின் வரலாற்றினையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும்” என முன்னாள் அமைச்சரும், இன்னாள் தேசிய ஊடக நிலையத்தின் தலைவருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார். 

அத்துடன், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் ஏராளமான சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான களங்களை நாங்கள் அமைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

மாவனல்லை, ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் “அடையாளம்” நூல் கடந்த சனிக்கிழமை மாலை வெளயீட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   அவர் அங்கு மேலும் கூறியதாவது:- 

வரலாறு என்பது மிகவும் முக்கியமானது. நாங்கள் எமது வரலாற்றினைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது போன்றே மற்றவர்களினதும் வரலாற்றினை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாடு என்ற ரீதியிலும், உலகம் என்ற ரீதியிலும் எம்மால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். 

முன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீத் செய்த மிகவும் நன்மைத் தரும் செயல் லோனா தேவாராஞா மூலம் முஸ்லிம்களின் வரலாற்றினை தொகுத்தமையாகும். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு ஆயிரம் வருடங்களுக்கும் மேலானது. இலங்கைக்கு போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என அனைவரும் ஆக்கிரமிப்பாளர்களாகவே வந்துள்ளனர். ஆனால், முஸ்லிம்கள் ஒருபோதும் ஆக்கிரமிப்பாளர்களாக இங்கு வரவில்லை. இலங்கை வரலாற்றில் அவ்வாறு குறிப்பிடப்படவும் இல்லை.

இலங்கை வரலாற்றில் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் பற்றி கூறும் போது நமது நாட்டின் செல்வங்களை சூறையாடியே செல்வந்தரானார்கள், பிரிவினையை ஏற்படுத்தியே ஆட்சி நடத்தினார்கள் என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை வந்த முஸ்லிம்கள் இந்த நாட்டின் செல்வங்களை சூறையாடினார்கள் என்றோ, கொள்ளையடித்தார்கள் என்றோ எந்தவொரு வரலாற்றிலும் கூறப்படவில்லை. 

தெற்காசியாவில் இஸ்லாம் ஆயுதபலத்தால் பரப்பப்படவில்லை என்று பேராசிரியர் தோமஸ் ஆர்னோல்ட் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இது தான் எமது வரலாறு. உலகில் முஸ்லிம்  நாடுகளில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுத்தப்படுகின்றது. அது  சில தரப்பினரின் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கும், அந்நாட்டின் செல்வத்தை சூறையாடுவதற்காவும் மாத்திரமே. ஈராக்கில் ஜனநாயக்தை ஏற்படுத்துவதாக கூறிக்கொண்டு படையினரை அனுப்பிவயவர்கள் அங்கு மில்லியன் கணக்கானவர்களை கொன்றுக்குவித்தனர். அதுவா ஜனநாயகம்? அங்கிருந்த எண்ணெய்கள் எங்கு சென்றது என்பது ரகசியம் அல்ல அனைவருக்கும் தெரியும். அதற்காக டோனி பிலயர் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். 

இஸ்லாத்துக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பல செயற்பாடுகள் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆயுதப் போர், பொய் பிரசாரங்கள் மூலமாகவும் அதனைச் செய்கின்றனர். இதிலிருந்து விடுபடுவதற்கு இலங்கை போன்ற சிறிய நாட்டினால் முடியாது. ஏன் எனில் பலம் வாய்ந்த உலகலாவிய செய்தித் தளங்கள் சோடிக்கப்பட்ட செய்திகளை பிரச்சாரம் செய்கின்றனர். அதன் தாக்கம் இலங்கையிலும் உள்ளது. தெரிஞ்சோ தெரியாமலோ அது உண்மை என நம்புகின்ற சில தரப்பினர் உள்ளனனர். இதன் விளைவுகளை நாங்கள் கடந்த காலங்களில் அனுபவித்தோம். 

இவ்வாறான கால சூழலில் முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பு என்ன? எமக்கு கிணற்றுத் தவளைகள் போன்று தொடர்ந்தும் இருக்க முடியாது. இஸ்லாம் தொடர்பில் சந்தேகங்கள் இருக்குமாயின் அதற்கான தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. எமது உறவுகளை முன்பை விட அதிகரித்துக் கொள்ள வேண்டியுள்ளது. 

“முஸ்லிம் பெண்களின் ஆடை முன்பு போல் அல்லாது ஏன் இப்போது மாற்றமடைந்துள்ளது” என்று என்னிடம் ஓருவர் கேள்வி எழுப்பினார். நான் கூறினேன் “நாங்கள் சிறு வயதில் காரில் பயணிக்கும் போது காரில் கண்ணாடித் திரை இருந்தது. எனது பாட்டி அதனை மூடிச் செல்வார். ஆனால், தற்போது முன்பு போல் அல்லாது மிகவும் போட்டி மிக்க சமூகம். பொருளாதார பிரச்சினைகள் காரணமாக பெண் பிள்ளைகளும் தொழிலுக்கு செல்கின்றனர். கார்கள் இல்லை பொதுப் போக்குவரத்திலேயே சென்று வருகின்றனர். தனது பாதுகாப்புக்காகவே அதனை அணிகின்றனர்.” – என்றேன். 

இவ்வாறு நம்மத்தியில் சந்தேகங்கள் இருக்கின்றன. அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கான களங்களை நாங்கள் அமைக்க வேண்டும். நாங்கள் தனிமைப்படுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. 

முஸ்லிம்கள் என்பவர்கள் இந்த நாட்டைப் பாதுகாத்தவர்கள். ஒருபோதும் காட்டிக் கொடுத்தவர்கள் கிடையாது. அரசர்கள் காலத்தில் இருந்து முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கும் - அரசருக்கும் விசுவாசமானவர்களாகவே இருந்துள்ளனர். சுதந்திரத்திற்கு பின்னரான பிரிவினைப் போருக்கும் முஸ்லிம்கள் எதிராகவே இருந்தனர். அதனாலேயே அவர்கள் வடக்கிலிருந்து 24 மணித்தியாளத்துக்குள் வெளியேற்றப்பட்டனர். சுதந்திரத்திற்கு முன்னரும்- சுதந்திரத்திற்கு பின்னரும் முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு உண்மையான விசுவாசிகளாகவே இருந்துள்ளனர். இது தான் எமது வரலாறு, இது தான் எமது உரிமை. 

நாட்டின் மீது தேசப்பற்றுள்ளவர்களாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும். அதற்கான வழிகாட்டல்களை எமக்கு எமது முன்னோர்கள் காண்பித்துள்ளனர். ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு சிறுபான்மையினர் எவ்வாறு பங்களிப்பு வழங்க முடியும் என்பதற்கு இலங்கை முஸ்லிம்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.” – என்றார். 

No comments

Powered by Blogger.