Header Ads



இனவாதத்தை உருவாக்கி, மதங்களை விற்கக்கூடாது - மனோவுக்கு ரவி பதில்


தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசனால், பாதாள உலகக் குழுக்கள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட கருத்தை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நிராகரித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் நினைவிடத்துக்கு, ரவி கருணாநாயக்க எம்.பி நேற்று முன்தினம் (08) விஜயம் செய்த போது, ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த அமைச்சர் மனோ, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கொழும்பு வடக்குப் பகுதியில், பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "அனைத்து ஊடகவியலாளர்களும் கொழும்பு வடக்குக்கு விஜயம் மேற்கொண்டு, அமைச்சர் மனோ கணேசனால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகளை ஆராய்ந்து பார்க்க வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நாங்கள் சுதந்திரமாக நடந்து திரிகிறோம், ஆனால் அமைச்சர், விசேட பாதுகாப்புடன் நடந்து திரிகிறார்" என்று குறிப்பிட்டார்.

அமைச்சர் மனோ கணேசன் மீது தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்த ரவி, இனவாதத்தை உருவாக்கி, மதங்களை விற்கக்கூடாது என்று குறிப்பிட்டார்.

"உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக, அவ்வாறான பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தவர்களை நாம் தெரிவுசெய்திருந்தால், அவர்களைப் பெயரிடுமாறு, அமைச்சர் மனோ கணேசனைக் கோரியிருந்தோம். தூய்மையான முறையில் அரசியல் செய்பவர்கள் நாங்கள். தேர்தல்களில் வாக்குகளைப் பெற முடியாதவர்கள், அவ்வாறான கருத்துகளைக் கூறுகின்றனர். முன்னைய தேர்தல்களிலும், ஐ.தே.கவுக்கு எதிரான அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்" என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தவர்களைப் போலச் செயற்படுபவர்கள் தான், பாதாள உலகக் குழுக்களைப் பற்றி அதிகமாகக் கதைக்கிறார்கள் எனவும், கொழும்பு வடக்கில் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த எவரும் இல்லையெனவும், அவர்கள் அனைவரும் தன்னால் ஏற்கெனவே நீக்கப்பட்டு விட்டனர் எனவும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. இந்த மனோ கனக்ஷன் இன ஐக்கியம் பேசுவதாக காட்டிக்கொள்ளும் ஒரு மோசமான இனவாதி.இவனுடைய முகத்திரை பல முறை கிழிந்தும் துரதிஷ்டவசமாக எங்களுடைய முஸ்லிம்களில் சிலர் இவனை நல்லவனென்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்

    ReplyDelete

Powered by Blogger.