Header Ads



சாய்ந்தமருது மக்களுடன், சில நிமிடங்கள்

-டாக்டர். எஸ். நஜிமுதீன்-

மிக நீண்ட நாட்களாக புரையோடி கிடந்த ஒரு விடயம்,உள்ளிருந்தே வளர்ந்த ஒரு வகையான தொற்று, இன்று வலி தாங்காது வெளியில் வெளிப்பட்ட ஒரு நிலைமையில் இரண்டு ஊர்கள் தங்களது பகைமை புலமாக வரிந்து கட்டிக்கொண்ட ஒரு விடயமாக உள்ளூராட்சி சபை என்கின்ற அரசியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

காய்தல் உவத்தல் இன்றி, எந்த வித பக்கச் சார்புமின்றி இந்த விடயத்தை எடுத்து அணுகு கின்ற பொழுது, இது சாய்ந்தமருது என்ற ஊருக்கும் முஸ்லீம் காங்கிரஸ் என்கின்ற கட்சிக்கும் இடையிலான பலப் பரீட்சை யாக இது மாற்றப் பட்டிருக்கிறது. உண்மையில் இந்தப் பிரச்சினையின் தாத்பரியம் அதுவா என்று தேடினால் உண்மையில் அதுவல்ல. முஸ்லீம் காங்கிரஸ் என்கின்ற கட்சியின் சில அரசியல் அங்கங்கள் பிரச்சினையை பிழையாக கையாண்டு கட்சியையும் தலைமைத்துவத்தினையும் பொறுமையிழக்க செய்து, நிலைமை கட்டு மீறி சென்ற ஆத்திரத்தில் தலைமையும் அறிவிழந்து ஆர்பரிக்கின்ற ஒரு நிலைமைக்கு சூழல் இட்டு சென்றிருக்கிறது.

உண்மையில் சாய்ந்தமருது மக்கள் இந்த விடயத்தில் நம்பி இருந்ததே முஸ்லீம் காங்கிரஸ் என்கின்ற கட்சியினையே. அவர்கள் தொடர்ந்து நம்பினார்கள் கட்சி அதனை செய்து கொடுக்கும், அவர்களும் வழமை போன்று காங்கிரஸ் ஆதரவாளராக நிலைப்பார்கள் என்று நம்பினார்கள். அவர்களது நம்பிக்கையை உணர்ந்த ஏனைய கட்சியினர். அந்த வேலையை தாங்கள் செய்து கொடுத்து ஓரளவு வாக்கினை தங்கள் பக்கம் சாய்க்க முடியாதா என்று எடுத்த முயற்சியின் விளைவுதான் இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இதில் பரிதாபம் என்ன வென்றால் ஏனைய கட்சியினருக்கு என்ன லாபமோ அதனை காங்கிரஸ் கட்சி செய்து கொண்டிருப்பது தான். தொண்ணூறு வீதமும் காங்கிரசுக்கு வாக்களிக்கும் ஊரை ஓரளவாவது திருப்பி விடுவது ஏனைய கட்சியினருக்கே லாபம் என்ற சிறிய தொரு அரசியல் அறிவுகூட காங்கிரசுக்கு இல்லாமல் போனது துரதிஷ்டமே. ஆரம்பத்தில் இருந்து நிலைமை கட்டுக்கு மீறி செல்லும்போது, அதனை கடிவாளம் இட்டு நிறுத்தாது, ஹரீஸுடைய பேச்சு ஏற்படுத்திய தாக்கத்தினை ஆறுதல் படுத்தும் வண்ணம் தனது அறிவால் அதனைக் கையாளாது இழுத்தடித்து இன்னும் இன்னும் இந்த மக்களின் உணர்வுகளுடன் விளையாடியது போதாது என்று, வீராப்பு வேறு பேசி நிற்கிறது தலைமைத்துவம். 

அதற்கு மேல் சென்று  அபேட்சகர் பிர்தௌஸ் முள்ளி வாய்க்காலை ஞாபகப் படுத்துகிறார். போதாததற்கு இளைஞர்கள் வேலையில்லாமல் அலைவதாகவும்  , இந்த அரசியல் வாதிகள் இல்லையென்றால் எதுவுமே நடக்காது என்றபடி சிறு குழந்தை தனமான பயமுறுத்தலில் ஈடு பட்டிருக்கிறார்கள். இன்றைய கால கட்டத்தில் யாரும் அரசியல்  வாதிகளிடம் தொழில் கேட்டு செல்வதில்லை என்கின்ற விடயம் கூட இவர்களுக்கு தெரியாது போலும். நூற்றுக்கு தொண்ணூறு வீதமும் சொந்த தொழில் தேடி கொள்கின்றார்கள்  இவர்களிடம் போகும் சிறிய விகிதம் தான் எல்லோரும் என்ற நினைவில்தான் இன்னும் வாழ்கிறார்கள்.

தெரிந்தோ தெரியாமலோ தெருவால் போன ஒரு பிரச்னையை தனது மடியில் கட்டிக்கொண்டது முஸ்லீம் காங்கிரஸ். சாய்ந்தமருத்துக்கு சபை காங்கிரஸ்தான் பெற்றுத் தரும் என்று சொல்வதே ஒரு வகையான தற்கொலை முயற்சி தான். அப்படி பெற்றுக் கொடுப்பதற்கான அரசியல், புவியியல், குடிப் பரம்பல் சார் சாதக நிலைமைகள் கைவிட்டு போனபின், அப்படியான சாதக நிலைமைகளுக்கு கல்முனை மக்களே பெரும் சவாலை ஏற்படுத்திய பின் அதனை செய்து தருவேன் என்று யதார்த்த நிலை புரியாது வாக்கு அளித்தது ஏன் என்கின்ற பிரச்சினைக்கு இன்னும் முடிவில்லை.

கல்முனை மக்களுடைய வாழ்வாதாரம் கல்முனை நகரில்தான் இருக்கிறது என்பதனை உணராது, அல்லது உணர்ந்திருந்தும் தூர நோக்கில்லாது, குடிப் பரம்பல் குறித்து கவனமின்றி இருந்த கல்முனை மக்களின் பொடுபோக்கு குறித்து அறியாது இருந்த காங்கிரஸ் இனுடைய கையாலாகாத தனத்தை என்ன வென்பது.

கல்முனை வைத்திய சாலையை தெற்கு நோக்கி நகர்த்தும் போது குடிப் பரம்பல், மற்றும் மக்கள் நடமாட்டம் அதனை நோக்கி நகரும் என்பது புரியாமல், குறுகிய கால அரசியல் சூதாட்டத்தில் வெற்றி பெறுவதற்காய் நகர்த்திய காய்கள் எவ்வளவு என்பதனை காங்கிரஸ் அறியாமல் இருந்ததா?


சிறிது சிறிதாக உருவாகி வந்த சூறாவளியினை எப்படி எதிர் கொள்வது என்று புரியாது, மக்களின் போராட்டத்தினை எள்ளி நகையாடு வதிலும், பள்ளிவாயலை பயமுறுத்துவதிலும் ஈடுபட்டு, சாணக்கிய தலைமைத்துவம் என்று பெயர் எடுத்து, சமூகத்தின் கற்ற மட்டத்தில் கண்ணியத்தை சம்பாதித்து இருந்த ஒரு, அரசியல் பின் புலமே இல்லாத ஒரு தனி மனிதன், தன்னை இந்த கண்ணியமான இடத்துக்கு உயர்த்திய ஒரு மண்ணின் வேதனைகளையும், போராட்டத்தையும் கொச்சை படுத்தாது சிறிது காது கொடுத்து கேட்டு ஆறுதலை வழங்க வேண்டும் என்பதே என் போன்றோரது எதிர் பார்ப்பு.

இப்படியான நிலைமைக்கு இட்டு செல்லும் என்று நான் அறியேன் என்று தலைவர் குறிப்பிட முடியாது. ஏனென்றால் இது பற்றிய முன்னறிவிப்பு ஒன்றரை வருடத்துக்கு முன்னரே அவருக்கு என்னால் வழங்கப்பட்டது.

இப்பொழுது தலைவர் தலைகீழாக நின்றாலும் நிலைமை மாறப்போவதில்லை. ஆனால் கையாளுகின்ற விதம் ஏற்பட இருக்கின்ற சேதத்தினை சிறிது குறைக்கலாம். மக்களின் மனங்களில் இன்னும் வெறுப்பினை வளர்க்காது இருக்க கட்சியினர் முயற்சிக்க வேண்டும்.

மக்கள் கூட சிறிது பொறுமை காக்க வேண்டும். இந்த கட்சியில் அன்றிருந்து இன்று வரை எமது ஊரில் intellectual என்கின்ற கூட்டம் இருந்ததில்லை, எமது ஊர் காங்கிரஸ் என்கின்ற கட்சியுடன் இணைந்திருந்ததே முழுக்க முழுக்க  சமூகத்துக்காக. அதாவுல்லா ஊருக்கு எவ்வளோ செய்தும் நாம் மாறவில்லை. இன்னும் பல பேர் மாறியும் நாம் மாறவில்லை. எல்லாவற்றையும் சமூக கண்கொண்டு பார்த்தவர் நாம். எம்மை எள்ளிநகையாடி ஊர்வாதிகளாகவும்,பிரதேச வாதிகளாகவும் காட்டி பயமுறுத்தி,எமது நல்ல இயல்புகளை தட்டி எழுப்பி அதன் மூலம் எமது போராட்ட குணத்தை நசுக்க முனைகின்ற பலவித முயற்சிகள் தெரிகின்றன.

திடமாகவும் பொறுமையாகவும் இருந்து முன்னேறுங்கள் என்னுடைய மக்களே. யாரையும் மனம் நோகச்செய்ய வேண்டாம். வன்முறையை கையிலெடுக்க வேண்டாம். 

ஏனைய கட்சியினருக்கு எமது ஊர் பத்தோடு பதினொன்று. முஸ்லீம் காங்கிரஸுக்கு சாய்ந்தமருது உயிர் மூச்சு. அது அவர்களுக்கு தெரியும். 

3 comments:

  1. Well said Najee.
    It’s too late now.
    SLMC should have finished this issue before the nomination for the local polls.
    It’s sheer disappointment and desperation of the whole public which brought out through the Masjid administration.
    Now there is a move to dissolve the Masjid Administration.
    Very unfortunate.
    People will get agitated.
    Can’t understand why SLMC hierarchy has not given any fruitful thought to this burning issue.
    Let’s hope there will be a good solution after the local polls.
    Let the youngsters to be calm and vigilant till the polls.
    In sha Allah .

    ReplyDelete
  2. Dr. நஜிமுதீன் அவர்களே, உங்களை போன்றவர்கள் இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதட்கான முயற்சியை எடுக்காதது சாய்ந்தமருது தொழில்சார் வல்லுநர்கள் விட்ட மாபெரும் தவறு. இந்த பிரச்சினையை சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபை கையாண்ட விதமே மாபெரும் பிழை. அது நம்பிக்கையாளர் சபையின் விழுமியங்கள், கெளரவம், கடப்பாடு, ஜனநாயகத்தை மதித்தல், நாட்டின் சட்டதிட்ட்ங்களை மதித்தல், மக்களை ஒழுக்கமான முறையில் பக்குவமாக வழிநடத்தல் போன்ற அனைத்து விடயங்களையும் கணக்கில் கொள்ளாமல் வந்த மாத்திரத்துக்கு தான்தோன்றி தனமாக நடந்தது மாத்திரம் இல்லாமல் சுயேட்சையாக தேர்தலிலும் போட்டியிடுவதும், எந்த கட்சிகளையும் கூட்டம் நடத்த விடாமல் தடுப்பதும்... என்ன கூத்து இது. இப்படியொரு சரித்திரம் சாய்ந்தமருதில் நடந்த்ததுண்டா. ஞான சாரா தேரரை விடவும் கேவலமாக உங்களுக்கு தோன்றவில்லையா..?
    ஹக்கீமுக்கு தான் மூளை இல்லை என்றால் படித்த, பண்புள்ள மக்கள் மிகவும் நிறைந்த ( இப்பிரதேசத்திலேயே மிகவும் கூடியவர்கள் ) எங்கே சென்றது அறிவு. பிரதேச வாதத்தை கையில் எடுத்துக்கொண்டு ஒரு குறிகிய வெறித்தனத்துடன் கல்முனை மாநகரத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் நலத்தை சற்றும் சிந்திக்காமல் ஆடுகின்ற ஆட்டம் தான் என்ன?

    நீங்க ஹனிபா மாஸ்டருக்கு ஒரு பால்போத்தலையும் ரவட்டையும் வாங்கிக் கொடுங்கோ.....!!!!

    " ஹகீமுக்கும், ஹரீஸுக்கும் இந்த முறை நல்ல பாடம் படிப்பிக்க இருந்த மக்களை ஊர்த்துவேசம் கதைத்து, பிரதேச வாதம் கதைத்து இந்த நம்பிக்கையாளர் சபை களநிலவரத்தையே மாற்றி விட்டுள்ளீர்கள்.

    "இந்த தேர்தல் முஸ்லீம் காங்கிரசின் தலைமைத்துவத்தை நிராகரிக்கும் ஒரு தேர்தல் என்பதை கல்முனை மாநகர வாழ் மக்கள் தவறவிட மாட்டார்கள் என்று நம்புகிறோம். இப்பிரதேசத்து புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், இளஞ்சர்களும் மக்களை வழி நடத்துவார்கள் என்று நம்புகிறோம்." .

    ReplyDelete
  3. டாக்டர் அவர்களே, இந்த தொற்று நோயை உ௫வாக்கியதில் உங்களுக்கும் பங்கு உண்டு். டாக்டர் நசீ௫க்கும் உங்களுக்கும் இடையிலான தனிப்பட்ட தொழில் சம்பந்தபட்ட பிரசினையை ஏன் ஊர் பிரசினையாக ஆக்கினீா்கள்? இன்று சாய்ந்தமருதின் பெயர், மரியாதை, கவ்ரவம் காற்றில் பறப்பதற்கும் காடைத்தனம் தலைவிரித்து ஆடுவதற்கும் நீங்களும் காரணம் என்பதை ஊர் மக்கள் மிக தெளிவாக அறிந்துள்ளார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.