Header Ads



கள்ளன் கள்ளன், ரணில் கள்ளன் - யாரு திருடன் யாரு திருடன், மஹிந்த திருடன் (வீடியோ)


மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற விசேட அமர்வில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கும் அளவுக்கு புது வருடத்தில் நடத்தப்பட்ட முதலாவது நாடாளுமன்ற அமர்வு மாறிவிட்டது. இது தொடர்பான காணொளிகளும் தற்போது வெளிவந்துள்ளன.

பாரிய சர்ச்சையையும், மோதலையும், நாடாளுமன்ற மத்திய பகுதியில் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டங்கள் நடைபெறுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

இதில் நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை “திருடன்.. திருடன்..” என கோஷமிட்டதும், போராட்டம் நடத்தியதும், நாடாளுமன்ற விதிமுறைகளை சற்றும் மதிக்காமல் செயற்பட்டதும் அனைவர் மத்தியிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெறும் சம்பவங்கள் மிகவும் மோசமானவையாக காணப்படுகின்றன.

அந்த வகையில் மிகவும் முக்கியமான ஒரு விடம் குறித்து விவாதிப்பதற்கும், தமது தரப்பு நிலைப்பாட்டை பிரதமர் தெரிவிப்பதற்கும் ஒரு சந்தர்ப்பமாக இன்றைய நாடாளுமன்ற அமர்வை அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

கூட்டு எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த அமர்வு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த வகையில் அனைவரது கோரிக்கைகளையும் ஏற்று இன்று காலை நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்திருந்தார்.

அந்த வகையில் சபையும் கூடியது, அனைவரும் எதிர்பார்த்திருந்த பிரதமரின் உரையும் ஆரம்பமானது. ஆனால் அதை கேட்பதற்கு யாருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமே.

அதாவது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றும் போது கூட்டு எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்பு வெளியிட்டதுடன், கோஷங்களையும் எழுப்பி போராட்டம் ஒன்றை நாடாளுமன்ற மத்திய பகுதியில் நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.தே.கட்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

இந்த கைகலப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மயக்கமடைந்துள்ளார். அவரை உடனடியாக நாடாளுமன்ற அம்பியூலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆளும் கட்சியினர் மற்றும் கூட்டு எதிர்கட்சியினருக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் போது இருதரப்பு உறுப்பினர்களும் தாக்குதலில் ஈடுபட்டதுடன், இரு உறுப்பினர்கள் மீது துரத்தித் துரத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா காயமடைந்துள்ளார்.

இந்த நிலையில் முதலில் தற்காலிகமாக 10 நிமிடங்களுக்கு சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதுடன், தொடர்ந்து நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதில் கூட்டு எதிர்க்கட்சியினர் அனைவரும் நாடாளுமன்றம் என்ற நிலைப்பாட்டை மறந்து விட்டு, ஒரு போராட்ட இடமாகவே பார்த்தார்கள். அவர்களது கோஷங்களும், செய்கையும் மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.