Header Ads



தற்போதைய அரசாங்கம், என்ன செய்கிறது - மகிந்த


தமது படங்களை தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தும் உரிமை சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு மாத்திரமே இருப்பதாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நேற்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர், தமது பரப்புரை சுவரொட்டிகளில் எனது படத்தை பிரசுரிக்க விரும்புகின்றனர்.

ஆனால், தாமரை மொட்டுடன் கூடிய சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு மாத்திரமே, அதனைப் பயன்படுத்துவதற்கான உரிமை உள்ளது.

எனது ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட மத்தல விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் என்பனவற்றை, வீணான திட்டங்கள் என்று விமர்சித்த தற்போதைய ஆட்சியாளர்கள், அவற்றை பில்லியன் கணக்கான ரூபாவுக்கு விற்றுள்ளனர்.

சங்ரிலா விடுதியை கட்டுவதற்காக 5 ஏக்கர் காணியை தனது அரசாங்கம் சீனாவுக்கு விற்றதை விமர்சித்தவர்கள், அதன் திறப்பு விழாவுக்குச் சென்று, கல்வெட்டில் தமது பெயர்களைப் பொறித்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் நண்பர்களை எதிரிகளாக்கி வைத்திருக்கிறது. இப்போது அமெரிக்காவையும் எதிரியாக்கியுள்ளனர். இலங்கைக்கு இப்போது ஜிஎஸ்பி வரிச்சலுகை கிடையாது.

ரஷ்யா எமது தேயிலைக்குத் தடை விதித்தது. இதனால், முன்னர் ஆபத்தானது என்று கூறி விதித்த அஸ்பெஸ்டஸ் தடையை நீக்க அரசாங்கம் இணங்கியது. இத்தகைய ஆலோசனைகளை வழங்கியது யார்? ரணில் விக்கிரமசிங்க தான்.

தற்போதைய அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை, தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபியின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே இந்த அரசாங்கம் செயற்படுகிறது.

எனவே, தேர்தலில் இந்தக் கட்சிகளுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகவே கருதப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் தாம் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பரப்புரைக்கு தலைமை தாங்கவுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச அறிவிததுள்ளார்.

அத்துடன் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையும் இங்கு வெளியிடப்பட்டது.

No comments

Powered by Blogger.