Header Ads



அத்துலத்முதலியின் மகள், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு

முன்னாள் அமைச்சர் லலித் அதுலத்முதலி மற்றும் ஸ்ரீமத் அதுலத்முதலி ஆகியோரின் புதல்வியான சரலா அதுலத்முதலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். 

இதன்போது அவர், சுதந்திர மற்றும் ஜனநாயக சமூகம் ஒன்றை எதிர்பார்த்து தேசத்தை கட்டியெழுப்புவதற்காக விரிவானதோர் பணியை முன்னெடுத்த தனது தந்தையின் அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்த சரலா அத்துலத்முதலி இன்று இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு தேசமாக நாட்டை முன்கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுவரும் பணிகளை பாராட்டினார். 

மேலும், ஜனாதிபதி நாட்டுக்காக முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க தான் தயார் என தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

இலங்கையின் முன்னாள் வர்த்தக, தேசிய பாதுகாப்பு, விவசாயத்துறை  அமைச்சராகவிருந்த லலித் அத்துலத்முதலி 1977 – 88 ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், பின்னர் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக செயற்பட்டு வந்ததுடன், மக்கள் மத்தியில் மகாபொல புலமைப்பரிசில் முறைமையை அறிமுகப்படுத்தியதன் மூலம் பிரபலமானார். 

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சிறப்பான பணிகளை மேற்கொண்டுவரும் சந்தர்ப்பத்தில் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். 

இதேவேளை, பொதுஜன முன்னணி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்த நால்வர் நேற்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். 

இதற்கமைய, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அனைத்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களே இவ்வாறு சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.