Header Ads



இன்றைய பாராளுமன்ற சண்டை, பணப்பையை திருடி ஓடும் கள்வனின் பின்னால், கூச்சலிடுவது போல

பணப் பையை திருடிக்கொண்டு ஓடும் கள்வனின் பின்னால் கூச்சலிடுவதைப்போல இன்று பாராளுமன்றத்தில் உள்ள இரு சாராரும் ஒருவரை ஒருவர் குற்றஞ் சாட்டிக்கொள்கின்றனர். ஆனால் உண்மையான திருடர்களை மக்கள் நன்கு அறிவார்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (10) பிற்பகல் அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்துள்ள மக்கள் சந்திப்புக்களின் முதல் சந்திப்பாகவே இன்று ”சுதந்திரத்தின் மக்கள் சந்திப்பு” எனும் பெயரில் பெருந்திரலான மக்களின் பங்குபற்றுதலோடு இந்த மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. 

நாட்டை நேசிக்கும் ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய அரசியல் பயணத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுடன் அடியெடுத்து வைப்போமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அரசியலுக்கு பிரவேசித்ததன் பின்னர் பணம் சம்பாதித்து தமது பைகளை நிரப்பிக்கொண்டு மக்களின் மனசாட்சியை எட்டி உதைத்து செல்வந்தர் ஆகுவதற்கு எதிர்வரும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் எந்தவொரு பிரதிநிதிக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென மக்களுக்கு உறுதிமொழி வழங்கினார். 

2015 ஜனாதிபதி தேர்தலின் அப்போதைய அரசாங்கம் தோல்வியடைவதற்கு ஏதுவான பல காரணங்கள் காணப்பட்ட போதிலும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மேற்கொண்ட ஊழல் மோசடி மற்றும் முறையற்ற செயற்பாடுகளே முக்கிய காரணமாகுமென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பிரதேச சபைகளுக்கும், மாகாண சபைகளுக்கும், பாராளுமன்றத்திற்கும், பிரதமர் பதவிக்கும், ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டும் எந்தவொரு நபருக்கும் மக்களின் பணத்தை கையாடல் செய்வதற்கு உரிமையில்லை என வலியுறுத்தினார். 

எல்லா தேர்தல்களின் போதும் வாக்குறுதியளிக்கப்பட்ட, ஆயினும் நிறைவேற்றப்படாத மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்து ரஜரட்ட மக்களுக்கு வழங்கியமையானது அந்த விவசாய மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட வரலாற்று ரீதியான பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். தற்போது உரிமை கொண்டாட எத்தனிக்கும் சிலர் ஐந்து வருடங்களாகியும் ஒரு சதத்தையேனும் வழங்காதவர்களே என்பது கவலைக்குரிய விடயமாகுமென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அன்றே இதன் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டிருப்பின் மொரகஹகந்த நீரினால் ரஜரட்ட பிரதேசத்தின் வயல் நிலங்கள் இதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னரே செழிப்படைந்திருக்குமெனக் குறிப்பிட்டார். 

இராணுவத்தினர் பழிவாங்கப்படுவதாக இன்று அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் உண்மையான பழிவாங்கல்கள் இடம்பெற்றது, கடந்த காலத்தில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சிறை பிடிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலாகுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சர்வதேசத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து இராணுவத்தினர், கடற்படை மற்றும் விமானப் படையினரை பாதுகாத்து அவர்களது கௌரவத்தையும் அபிமானத்தையும் பேணுவதற்காக கடமையை தற்போதைய அரசாங்கமே நிறைவேற்றி வருகின்றதென்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்களென தெரிவித்தார். 

தேசபற்று நாட்டின் அடையாளம் மற்றும் எமது உரிமைகளை பாதுகாத்து என்றும் தாய் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் முற்போக்கு அரசியல் இயக்கமான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து எதிர்காலத்தில் தூய்மையான அரசியல் செயற்பாடுகளின் ஊடாக சுபீட்சமிக்க நாட்டை கட்டியெழுப்ப நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அவர்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். 

ஐக்கிய தேசியக் கட்சியினதும் பொதுஜன முன்னணியினதும் தேசிய சுதந்திர முன்னணியினதும் செயற்பாட்டாளர்கள் பலரும் சுயேட்சைக் குழுக்களை பிரதிநிதித்துவம் செய்த அபேட்சகர்கள் பெரும்பாலானோரும் இதன்போது ஜனாதிபதி அவர்கள் முனுனெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து மேடைக்கு வருகை தந்தமை விசேட அம்சமாகும். 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும்  மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.