Header Ads



பாராளுமன்றத்தில் நேற்று, நடந்த அசிங்கங்கள் (முழுவிபரம்)


-A.Kanagara-

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள, மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரங்கள் தொடர்பிலான அறிக்கையை, நாடாளுமன்றத்தில் உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு, ஒன்றிணைந்த எதிரணி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியதை அடுத்து, சபையில் பெரும் களேபரம் ஏற்பட்டது.  

ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே எழுதப்பட்டிருந்த வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்த ஒன்றிணைந்த எதிரணியினர், சபையின் நடுவே வந்துநின்று கோஷங்களை எழுப்பினர். அதன்போது, சபைக்கு நடுவே ஓடோடிவந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், பதாதைகளைக் கிழிந்தெறிந்தனர். பதாதைகளை ஐ.தே.கவினர் பிடித்துக் கிழிக்கவும் ஒன்றிணைந்த எதிரணியினர் அதனைப் பாதுகாக்கவும் முயன்றமையால், இரு தரப்பினரும் மாறிமாறி கன்னங்களில் அறைந்துகொண்டனர், முகங்களில் குத்திக்கொண்டனர். இதனால் கன்னியமர்வு, அடிதடியில் சுமார் இரண்டரை மணித்தியாலயத்துக்குள் நிறைவடைந்தது.  

ஒன்றிணைந்த எதிரணி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக, நாடாளுமன்றத்தைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேட அமர்வாக நேற்று (10) கூட்டினார்.  

2018ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கன்னியமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுக் காலை 10:30க்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், சபாநாயகர் அறிவிப்பின் போது, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, இன்னும் ஒரு வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.  

இதன்போது எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “விவாதத்தை நடத்துமாறு, ஒன்றிணைந்த எதிரணியினரும் ஜே.வி.பியினரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருமே கோரியிருந்தனர். அதனடிப்படையில், நாடாளுமன்றம் இன்று (புதன்) கூட்டப்பட்டது. விவாதத்தைக் கொண்டு நடத்துவதற்கு நாங்கள் தயார். இவர்கள் தயாரில்லையே” என, எதிரணியினரைப் பார்த்துக் கூறினார்.  

மறைத்து வைத்துக்கொண்டிருக்க முடியாது

இதன்போது, எழுந்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க, “நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுமாறு, கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தோம். கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதும், இந்த விவகாரம் தொடர்பில் வலியுறுத்தினோம்.  

“பிணைமுறி விவகாரம் தொடர்பில், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை உங்களிடம் கேட்டோம், ஜனாதிபதியை அறிவுறுத்துவதாக, நீங்கள் தெரிவித்திருந்தீர்கள்” என, சபாநாயகரைப் பார்த்துக் கூறினார்.  

“அறிக்கையின் சாராம்சத்தை, ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், அரச நிதி, மோசடி செய்யப்பட்டுள்ளது. அறிக்கையில்லாமல் விவாதிக்க முடியாது. ஆகையால், அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.  

“அறிக்கையை கையளிப்பதற்கு, ஜனாதிபதி செயலகம் தயாராக இருக்கவேண்டும். தகவலறியும் சட்டத்தின் ஊடாக, அவ்வறிக்கையைக் கோரியுள்ளோம். அந்த அறிக்கை, எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக எங்களுக்குக் கிடைக்கவேண்டும்.  

“அறிக்கை கிடைப்பதற்கு, சபாநாயகரே ஆவனசெய்ய வேண்டும். இன்று முடியாவிடின், நாளையாவது சபையைக் கூட்டி, அறிக்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தனி நபரல்ல, சிலரினால் இந்த அறிக்கையை மறைத்து வைத்துக்கொண்டிருக்க முடியாது” என்றார்.  

‘நாங்கள் கேட்கமாட்டோம்’

ஒழுங்குப் பிரச்சினையை கிளப்பிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான பந்துல குணவர்தன, “பிணைமுறி விவகாரம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விவாதம் நடத்துவதற்கே, நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது. பிரதமர் உரையாற்றுவதற்கு அல்ல. இங்கு விசேட அமர்வு நடைபெறுகிறது. பிரதமரின் உரையை நாங்கள் கேட்கமாட்டோம்” எனக் கூறியமர்ந்தார்.  

‘கையில் இல்லாத அறிக்கையைப் பெற்றுத்தாருங்கள்’

“சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் எந்தமொழியாக இருந்தாலும், எங்களுக்குப் பிரச்சினையில்லை. ஆங்கிலத்தில் இருந்தாலும் பரவாயில்லை. அவ்வறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் தயார்” எனத் தெரிவித்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஷ் குணவர்தன, கையில் இல்லாத அறிக்கையைப் பெற்றுத்தருமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.  

“அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமையின் பிரகாரமே, நாடாளுமன்றத்தை நாம் கூட்டினோம். பிரதமருக்கும் உங்களுக்கும் (சபாநாயகருக்கும் ) கடிதம் எழுத்தினோம். தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமருடனும் உரையாடினேன்.  

“நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டம், இன்று புதன்கிழமை நடைபெறும் நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதற்காகும். இந்தப் பிணைமுறி விவகாரம் தொடர்பிலான பிரச்சினையில் அரசாங்கம் குற்றவாளியாக இருக்கிறது.  

“சபாநாயகரின் கட்டளையை மீறி, அல்லது அதற்கு மேல் யாராலும் செயற்படமுடியாது. முன்னாள் சபாநாயகர்களான அநுர பண்டாரநாயக்க மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர், இந்த உயரிய நாடாளுமன்றம், உயர்நீதிமன்றத்தை விட உத்தமமானது என அறிவித்திருந்தனர்.  

“நீங்கள் (சபாநாயகர்) கட்டளையிட்டால், அறிக்கையைக் கையளிக்க வேண்டும். ஆகையால், கையில் கிடைக்காத அந்த அறிக்கையைப் பெற்றுத்தாருங்கள்” என்றார்.  

ஒழுங்குப் பிரச்சினைகள் எழுப்பப்பட்டதன் பின்னர் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு எனக்குக் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில், நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை காலம்தாழ்த்த முடியாது. இது தேர்தல் காலம், புதிய முறைமையின் கீழ் தேர்தல் நடத்தப்படுவதனால், அடிமட்டத்துக்குச் சென்று வேலைசெய்ய வேண்டியிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரையும் இங்கு அழைப்பது கடினமான விடயமாகும்.  

“பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பிட்டிபன ஆணைக்குழுவை நியமித்திருந்தேன். அதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இன்று நான் விடுக்கும் விசேட கூற்றுக்குப் பின்னர், என்னை இன்னுமின்னும் ஏசுவார்கள்” என்றார்.  

அறிக்கை வேண்டும்

இதன்போது எழுந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், “ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கை, நாடாளுமன்றத்தில் உடனடியாகக் கையளிக்கப்பட வேண்டும். அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கான உரிமை, மக்களுக்கு இருக்கிறது. ஆகையால் அறிக்கை உடனடியாக, நாடாளுமன்றத்தில் கையளிப்பதற்கு வழிசமைக்க வேண்டும்” என்றார்.  

“இரண்டு அறிக்கைகள் தொடர்பிலும் விசாரிக்க வேண்டும். கடந்த காலங்களில் இடம்பெற்ற இவ்வாறான நிதி மோசடிகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்றார்.  

தனக்குத் தெரியாது

ஒழுங்குப் பிரச்சினைகள் மற்றும் தெளிவுப்படுத்த விளக்கக் கூற்றுகளை அடுத்து கருத்துரைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “நாடாளுமன்றத்தை விசேடமாக கூட்டுவதற்கான திகதியை பிரதமரே குறித்தார். அறிக்கை தொடர்பில் தனக்கு எதுவுமே தெரியாது என்றார். அறிக்கை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று காலையும் பேசினேன். எங்கள் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் எதுவுமில்லை” என்றார்.  

மறைந்திருந்து பேச முடியாது

இதனிடையே ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்
எம்.பியான வாசுதேவ நாணயக்கார, “எதற்காக சபையை இன்று (புதன்) கூட்டினார் என்பது தொடர்பில், நீங்கள் (சபாநாயகர்) தெளிவுப்படுத்தினீர்கள். அதுதான் பிரதான காரணமாக இருந்தது. ஆனால், அதற்காக அறிக்கை இல்லை.  

“இந்த விவகாரத்துக்குள் மறைந்திருந்துகொண்டு, பிரதமர் பேசுவதற்கு முயற்சிக்கின்றார். அதற்கு இடமளிக்கமுடியாது” என்றார்.  

இன்றைக்கே அழையுங்கள்

“நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோரின் கோரிக்கைகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஜனாதிபதியின் செயலாளரை இன்று (புதன்) நண்பகல் அழைத்து, விசாரிக்கவேண்டும் அதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.  

“நாடாளுமன்றத்துக்கு முதலில் கிடைக்கவேண்டிய அறிக்கை, வேறெந்த நிறுவனங்களுக்கோ கிடைத்துள்ளது. அல்லது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து உடனடியாக விசாரித்து, அறிக்கையை இன்றையதினமே கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.  

முன்னர் அங்கு பின்னர் இங்கு

இதனிடையே, சுமந்திரனுக்கு பதிலளித்து பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள அந்த பிணைமுறி விசாரணை அறிக்கை, முதலாவதாக, அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். அதன்பின்னர்தான் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அமைச்சரவையே தீர்மானிக்கும்” எனக் கூறினார்.  

“இந்த விவகாரம் தொடர்பில், ஜனாதிபதியை இன்றிரவு (புதன்) நான் சந்திப்பேன். சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், அநுராதபுரத்துக்குச் சென்றுள்ளனர். நீங்கள் செல்லவில்லையா?” என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரா பார்த்து பிரதமர் கேட்டார்.  

நேரம் 11 மணி 5 நிமிடங்கள்

இந்த சர்ச்சை விளக்கங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்கள் நிறைவுபெறாத நிலையில், 11:05க்கு பிரதமர் தன்னுடைய விசேட கூற்றை விடுத்து உரையாற்றுவதற்கு ஆரம்பித்தார்.    உரையுடனேயே எழுந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒழுங்குப் பிரச்சினை எழுப்புவதற்காக, ஒலிவாங்கியை முடுக்கிவிடுமாறு கோரிநின்றனர். அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டவில்லை. இதனால், கடுமையாக அதிருப்தியுற்ற அவர்கள், தங்களுடைய கோவைகளுக்கு மறைத்து கொண்டுவந்திருந்த பதாதைகளை ஏந்திபிடித்தவாறு, தங்களுடைய ஆசனங்களுக்கு முன்பாக எழுந்து நின்று, கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். 

பிரதமரோ கடுமையான வேகத்தில், விசேட கூற்றை விடுத்து உரையாற்றிக்கொண்டிருந்தார். எனினும், கடும் சீற்றம் கொண்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மெதுவாக, சபைக்கு நடுவாக இறங்கி வந்துகொண்டிருந்தனர்.  

இறுக்கிப் பிடித்துக்கொண்டனர்

ஒன்றிணைந்த எம்.பிக்கள் மெதுவாக இறங்கிவரும்போது, ஓடோடி வந்த படைக்கல சேவிதரும் உதவி படைக்கல சேவிதரும், செங்கோலுக்கு முன்பாக வந்து, இருபக்கங்களிலும் நின்றுகொண்டு, செங்கோலை இறுக்கப்பிடித்துக் கொண்டனர்.  

நழுவினார் ஐயா

விபரீதமொன்று நடக்கப்போவதாக முன்கூட்டியே உணர்ந்துகொண்டது போல, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா, தன்னுடைய ஆசனத்திலிருந்து எழுந்து சென்று, மூன்றாவது வரிசையில், ஓரத்திலிருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்து, சபைநடுவே நடைபெற்ற ரகளையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.  

எனினும், இருதரப்பினரும் கைகளை நீட்டிக்கொண்ட வேளையில், அந்த ஆசனத்திலிருந்தும் மெதுவாக எழுப்பிய ஐயா, கதவைத் திறந்துகொண்டு அவையை விட்டே வெளியேறிவிட்டார்.  

பின்பக்கம் ஓடினர்

இந்நிலையில், எதிர்க்கட்சி பக்கத்தில் பின்வரிசையில் அமர்ந்திருந்த ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எம்.பிகள், பின்பக்கமாக ஓடிச்சென்று, ஆளுந்தரப்பு பக்கத்துக்கு திமுதிமுவென வந்தனர். அவ்வாறு வந்த, மரிக்கார் மற்றும் சிட்டி ஜயரத்ன ஆகிய இருவரும், சபைக்கு நடுவே வந்துநின்று கோஷம் எழுப்பிக்கொண்டிருந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏந்தியிருந்த, பதாதைகளைப் பிடித்து இழுத்து கிழித்து வீசியெறிந்தனர்.  

கபடி விளையாடுவது போல, பிடிப்பட்டு விடாமல் அங்குமிங்கும் ஓடிய மரிக்கார் எம்.பி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் இருந்த பதாதைகளைக் கிழித்தெறிந்தார். மரிக்கார் எம்.பியுடன் இன்னும் சில உறுப்பினர்கள் இணைந்துகொண்டனர். எனினும்,பதாதைகளைப் பாதுகாப்பதில், ஒன்றிணைந்த உறுப்பினர் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.  

தினேஷ் குணவர்தன உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர், செங்கோலுக்கு அருகில் வந்துநின்றுகொண்டு, சபாநாயகரை தூற்றிக்கொண்டிருந்தனர். செங்கோலை தூக்குவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சிலரும், அதனைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர்.  

பளாரென விழுந்தது அறை

அப்போதுதான், பளாரென சத்தம் கேட்கும் வகையில், மரிக்காரின் கன்னத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினரொருவர் அறைந்துவிட்டார். அங்குமிங்கும் ஓடியோடி, பதாதைகளை கிழித்துக்கொண்டிருந்த மரிக்கார் எம்.பி, கன்னத்தை தேய்த்துகொண்டு, தள்ளிமுட்டி மோதுண்டார்.  

இதன்போது, இருத்தரப்பினர்களும் ஒருவருக்கொருவர் மாறிமாறி குத்திக்கொண்டனர். விபரீதத்தை உணர்ந்த ஆளும் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர், ஐ.தே.க உறுப்பினர் அழைத்துச்சென்றனர்.  

மயங்கினார் எம்.பி

ஆரம்பத்திலிருந்தே சபை நடுவே நின்று, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் முட்டி மோதிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான கவிந்த ஜயவர்தன, சபைக்கு நடுவே மயங்கிவிழுந்துவிட்டார்.  

அவரை உடனடியாக தூக்கியெடுத்த இதர உறுப்பினர்கள், படை உதவியாளர்களின் ஆசனத்துக்கு அருகில் அழைத்துச் சென்று, தண்ணீர் கொடுத்தனர். ஆளும் பக்கத்தில் சிறிதுநேரம், அமர்ந்திருந்த அவர், பின்னர் வெளியேறிச் சென்றுவிட்டார். தண்ணீர் போத்தலை வாங்கிக்கொடுத்த மரிக்கார் எம்.பி, மீண்டும் ஓடோடி சபைக்கு நடுவே வந்து, குத்துவிடுவதிலேயே குறியாக இருந்தார்.  

தங்களுடைய முகங்களை பாதுகாத்துக்கொண்டு, மற்றவர்களின் முகங்களை பதம்பார்ப்பதிலேயே இருதரப்பைச் சேர்ந்த சிலர் குறியாக இருந்தனர்.  

இந்நிலையில், பிரதமர் தனது சிறப்புரையில் அரைவாசியை நிறைவுசெய்திருந்தார். பிரதமரின் பக்கத்துக்கு யாரும் வந்துவிடாத வகையில், ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அரைவட்டத்தில் நின்று பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்தனர். தன்னுடைய தொனியை அவ்வப்போது உயர்த்தி, உயர்த்தி தன்னுரையை பிரதமர் தொடர்ந்து சென்றார்.  

கோஷத்தை மாற்றிய கோரஸ் கோஷம்

சட்டம் எலோருக்கும் சமம் என்றால் பொன்ட் கள்வர்களுக்கு இல்லையா, கள்ளன் கள்ளன், பிணைமுறி கள்ளன், உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளையே ஏந்தியிருந்த ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்கள்,  

ஹொரா... ஹொரா... பொன்ட் ஹொரா.... (அதாவது, கள்வன், கள்வன், பிணைமுறி கள்வன், எனக் கோஷமெழுப்பிக் கொண்டிருந்தனர். அதுவரையிலும் பிரதமரின் உரைக்கு இடமளித்து கொண்டிருந்த, சபைக்கு நடுவே நின்றிருந்த ஐ.தே.க உறுப்பினர்கள்.  

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஹொரா... ஹொரா.. (அதாவது கள்வன் கள்வன் ) எனக் கோஷம் எழுப்புகையில், ஐ.தே.க உறுப்பினர்கள் மஹிந்த ஹொரா... மஹிந்த ஹொரா (அதாவது மஹிந்த கள்வன், மஹிந்த கள்வன் என்றனர்) இதனால், ஒன்றிணைந்த எதிரணியின் கோஷத்தின் அர்த்;தத்தையே, ஐ.தே.கவின் கோரஸ் கோஷம் மாற்றிவிட்டது.  

இந்த தள்ளுமுள்ளு இடிபாடுகள், மத்தியில் பிரதமரின் உரையும் 11.30 மணியளவில் நிறைவடைந்தது. தனதுரையின் இறுதியில் இரண்டு கைகளையும் மேலேயும் கீழேயும் உயர்த்தி உயர்த்தி, கடுந்தொணியில், யார் கள்வன், யார் கள்வன் என கேட்டுக்கொண்டே, உரையை முடித்தார்.  

இந்நிலையில், சபை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதற்கு முற்படுகையில், எதிர்க்கட்சியின் பின்பக்கமாக, பதுங்கி வந்த மரிக்கார் எம்.பி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் காமினி லொக்குகேயின் கழுத்தில், ஒரேயொரு குத்துவிட்டு, வந்தவேகத்திலேயே கதவால் தப்பியோடிவிட்டார்.  

சபையின் நடுவில் வைத்து, மரிக்காரை தாக்கியது காமினி லொக்குகே என்றும், அதற்கு பழித்தீர்க்கும் வகையிலேயே, மரிக்கார் இவ்வாறு பின்னால் பதுங்கி, தாக்கிவிட்டு ஓடிவிட்டாரென பின்னர் அறியகிடைத்தது. அதனையடுத்தே, எதிர்க்கட்சி பக்கம் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பின்னியெடுத்தனர்.  

நடுவில் சிக்கிக்கொண்ட பெண் எம்.பி

இதன்போது பின்வரிசையிலிருந்து இரண்டாவது வரிசைக்கு ஓடோ ஓடி வந்த ஐ.தே.கவின் கண்டி மாவட்டத்தை சேர்ந்த ரோஹினி கவிரத்ன, சண்டையை விலக்கிவிடுவதற்கு முயன்றார். எனினும், அவர் நடுவில் சிக்கிக்கொள்ள, எதிர்த்தரப்பினரின் முகங்களை ஆளும் தரப்பினரும், ஆளும் தரப்பினரின் முகங்களை எதிர்த்தரப்பினரும் பதம் பார்த்துகொண்டனர்.  

சிக்கிக்கொண்ட அந்த பெண் எம்.பி, ஒருவாறு சுதாகரித்துகொண்டு, பிடியிலிருந்து விடுபட்டு, பின்கதவின் ஊடாக ஆளும் பக்கத்துக்கு வந்து, கலைந்திருந்த ஆடைகளையும் தலைமுடியையும் சரிசெய்துகொண்டார். அதுவரையிலும் தன்னுடைய ஆசனத்துக்கு முன்பாக எழுந்து நின்றுகொண்டிருந்த ஹிருணிகா பிரேமசந்திரன், ஆளும் பக்கத்துக்கு ஓடிவிட்டார்  

சட்டை கிழிந்தது, முகங்கள் வீங்கின

இருபக்கங்களையும் சேர்ந்த உறுப்பினர்கள் சிலரின் முகங்கள் வீங்கியிருந்ததுடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் பிரசன்ன ரணவீரவின் சட்டை கிழிந்திருந்து. அவருடைய சட்டையில் நான்கு பொத்தான்களும் கழன்று விழுந்திருந்தமையால், சட்டைய உடனடியாக சரிசெய்துகொள்ள முடியாத நிலையில் அவர் தடுமாறிக்கொண்டிருந்தார்.  

குத்து குத்துனு குத்திவிட்டு ஓடினார்

எங்கோ இருந்து ஓடிவந்த பிரசன்ன ரணதுங்க, குனிந்து சண்டையிட்டுக்கொண்டிருந்த உறுப்பினர்கள் சிலரின் முதுகுகளில் குத்தோ குத்துனு குத்திவிட்டு, தட்டுத்தடுமாறி ஓட்டமாய் ஓடிவிட்டார். அவையை விட்டு ஓடிய எவரும், சர்ச்சை நிறைவடையும் வரையிலும் சபைக்குள் வரவேயில்லை.  

நடுவே வந்த பிரதமர்

இந்நிலையில், சபைக்கு நடுவே வந்த பிரதமர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்ததுடன், எதிரணியின் பக்கமாகச் சென்று ஏதோ கூறுவதற்கு முயன்றார். எனினும் அவரை சுற்றிநின்றுகொண்டிருந்த அமைச்சர்களான, ஜோன் அமரதுங்க, சாகல ரத்னாயக்க, திகாம்பரம் உள்ளிட்டோர், எதிரணியின் பக்கம் போகவேண்டாமென பிரதமரை தடுத்து நிறுத்திவிட்டனர்.   

அந்த இருவரின் வாசமே அவையில் இல்லை

வருடத்தின் முதலாவது அமர்வுக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச உள்ளிட்ட இருவரும் வந்திருக்கவில்லை. இதேவேளை, ஆளும் மற்றும் எதிர்த்தரப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் நேற்றையதினம் சமுகமளித்திருக்கவில்லை.  

சு.கவினர் இல்லை

இந்தச் சர்ச்சை இடம்பெற்றுகொண்டிருந்த வேளையில், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை. எனினும், நண்பகல் 12 மணிக்கு பின்னர் நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் பின்னரான சபையமர்வின் போது, அமைச்சர் லசந்த அழகியவன்ன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் கருத்துரை வழங்கினார்.  

இந்நிலையில், சபை நடவடிக்கை இரண்டாவது தடவையாக, ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், சர்ச்சை தொடர்பில் கடுமையான விமர்சனங்களை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்ததுடன், இந்த சர்ச்சைக்கும், எம்.பிக்கள் கைநீட்டிக் கொண்டமைக்கான முழுப் பொறுப்பையும் சபாநாயகரே ஏற்றுக்கொள்ளவேண்டுமென, குற்றஞ்சாட்டினர்.  

ரணிலுக்கு இரண்டு தடவைகள்

பிரதமர் ரணில் விக்கிமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய சிறப்புரையை இரண்டு தடவைகள் ஆற்றினார். சர்ச்சைக்கு மத்தியில் உரையாற்றியதுடன், நண்பகல் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதும், அதே சிறப்புரையை இரண்டாவது தடவையாகவும் ஆற்றினார்.  

பிரதமர் தன்னுடைய சிறப்புரையை இரண்டாவது தடவையாக ஆற்றும் போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எந்தவித ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.  


வருடத்தின் கன்னியமர்வு அடிதடியுடன் நேற்று பிற்பகல் 12:50 மணியளவில் நிறைவடைந்துடன், சபை நடவடிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் ஒத்திவைக்கப்பட்டது.  

2 comments:

  1. Easy to solve this problem, President My3 could advise his secretary to the report as early as possible as they all known well there will be special event in the parliament about this bond issue...Then why he went to his village for his party with his all gangs????

    ReplyDelete

Powered by Blogger.