Header Ads



சவூதியில் சிக்கிய, இலங்கை மௌலவி - தலை வெட்டப்படுவதிலிருந்தும் தப்பினார்

(ஆதில் அலி சப்ரி)

சவூதி அரேபியாவுக்கு உம்றா யாத்திரிகர்களை அழைத்துச் சென்ற வழிகாட்டியிடமிருந்து போதை மாத்திரைகள் மீட்கப்பட்டது தொடர்பாகவும், அவ்விடயத்தில் அநியாயக் காரர்களுக்கு தண்டனையும், அநீதியிழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆக்கமொன்றை எழுதியிருந்தேன். 

ஊடகங்களில் செய்திகளையோ! புலனாய்வுக் கட்டுரைகளையோ! எழுதும் போது, சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரினது பக்க கருத்துக்களும் பெறப்பட்டே எழுதப்படுகின்றன. போதை மாத்திரை விடயத்திலும் சவூதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்டுள்ள சப்ரின் மௌலவியுடன் தொலைபேசியில் உரையாடிய அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் வழங்கிய தகவல்களுக்கமைய- தன்னிடம் மாத்திரை பொதியை வழங்கியதாக சப்ரின் மௌலவி குறிப்பிடும் ---------------------------------------------------, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், தபால் சேவைகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சரின் அந்தரங்க செயலாளர், மாத்திரை பொதியை தானே வழங்கியதாக கூறும் முஹம்மது ரஸ்மி ஆகியோரைத் தொடர்புகொண்டு, தகவல்களைப் பெற்றே கட்டுரையை எழுதியிருந்தேன். 

சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்ட சப்ரின் மௌலவி சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால், அவர் குறித்த நம்பகத்தன்மையான தகவல்களை பெறமுடியாத குறை காணப்பட்டது. கட்டுரை எழுதப்படும்போது, சவூதி அரேபிய நீதிமன்றத்தின் தீர்ப்பும் இலங்கைக்கு வந்தடைந்திருக்கவில்லை. இதனால் சப்ரின் மௌலவி, ஹஸன் சாதாத் ஆகியோருக்கான தண்டனை, மாத்திரைகளின் எண்ணிக்கை, பிடிபட்ட திகதி என்பன உறுதியற்ற நிலையில், உத்தியோகபூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதையும் குறிப்பிட்டே கட்டுரையை எழுதி இருந்தேன்.

கடந்த வெள்ளியன்று (05) காலை சவூதி அரேபிய இலக்கமொன்றிலிருந்து வாட்ஸ்அப் தகவலொன்று வந்திருந்தது. யாரென்று கேட்க, ‘ நீங்கள் சவூதி அரேபியாவில் பிடிபட்ட சப்ரின் மௌலவி குறித்து பத்திரிகையில் எழுதியிருந்தீர்கள். எந்த சப்ரின் மௌலவி குறித்து எழுதி இருந்தீரோ! அவர்தான் நான் ‘ என அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். மேலும், ‘நானும் என் குடும்பத்தினரும் உங்கள் கட்டுரையை வாசித்துவிட்டு, மகிவும் கவலையடைந்தோம் ’ எனக் குறிப்பிட்டிருந்தார். 

எனக்கும் சப்ரின் மௌலவிக்குமிடையிலான கலந்துரையாடல் மற்றும் பத்திரிகைச் செய்தியில் மறைக்கப்பட்ட விடயங்கள் என்ற தலைப்பில் அவரது குடும்பத்தினர் அனுப்பி வைத்திருந்த விடயங்களையும் வைத்து இந்த கட்டுரையை எழுதுகின்றேன். பத்திரிகை எவ்வித விடயங்களையும் மறைக்க
வோ! யாரையும் காப்பாற்றவோ! முனையவில்லை என்பதையும் உறுதிப்படுத்துகின்றோம்.      

சப்ரின் மௌலவி தம் பக்க விடயங்களை விளக்கும்போது, ‘என்னோடு சவூதியில் பிடிபட்டுள்ள ஹஸன் சாதாத்தின் சகோதரன் எனக்கு மாத்திரைப் பொதியை தந்ததாக பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. எனக்கும், அவருக்கும் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. 2017 பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நான் இலங்கையிலிருந்து புறப்படும்போது ----------------------------- ஹாஜியார் ஒரு பையை காட்டி, உம்றா குழுவுக்கு  தேவையான தேயிலை,  கோப்பியுடன் மதீனாவில் ஒருவருக்கு வழங்க


வேண்டிய பொதியொன்றும் இருக்கின்றது. அதை அவரிடம் ஒப்படைக்கவும் என்று கூறியே பொதியை என்னிடம் வழங்கினார். நான் ஹஜ் உம்றாவுக்கான வழிகாட்டியாக 6 வருடங்கள் அவரிடம் பணிபுரிந்தேன். என்னிடம் நேரடியாக மருந்துப் பொதியை வழங்கிய அஷ்ரப் ஹாஜியார், என்னிடம் அவ்வாறு எதுவும் வழங்காதது போன்றும் ஹஸன் சாதாத்தின்  சகோதரன்- ------------------------ நிறுவனத்திற்கு பின்னால் உள்ள வியாபார நிலையத்தவர் வழங்கியதாகவும் நிரூபிப்பதற்குரிய  வேலைகளை முன்னெடுத்து வருகின்றார். அஷ்ரப் ஹாஜியார் இவையனைத்தையும் மேற்கொள்வது அவரது ஹஜ், உம்ரா நிலையம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகும். நான் இங்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். ஒரு மனிதனுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதும்- தடுப்பதும் அல்லாஹ் மாத்திரமே. அல்லாஹ்வை மீறி, முழு உலகமும் ஒன்றிணைந்தாலும் ஒருவருக்கு வாழ்வாதாரத்தை வழங்கவோ! தடுக்கவோ! முடியாது. நான் அவரது வாழ்வாதாரத்தை, ரிஸ்கை தடுக்க முயற்சிக்கவில்லை. மாறாக, உண்மைகள் வெளிவர வேண்டும். அநீதியிழைக்கப்பட்டுள்ளவனுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இவ்விடயத்திலிருந்து மக்கள் படிப்பினை பெறவேண்டும் என்பதாகும்" என்று கூறிமுடித்தார்.  

மேலும், சப்ரின் மௌலவியிடம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் நீதிமன்ற விடயங்கள் குறித்து கேட்டபோது- ‘நான் அநியாயமாக பிடிபட்டு, அநியாயமாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளேன் என்பதை என்னைப் படைத்த இறைவன் அல்லாஹ் அறிவான். இறைவன் என்னைக் கைவிடமாட்டான் என்ற உறுதியான நம்பிக்கையும் உண்டு. நான் இங்கு தடுத்துவைக்கப்பட்டுள்
ளேன். சிரமங்களுக்கு மத்தியிலேயே தொலைபேசியினூடாக எனது விடயங்களை வெளியே கொண்டுவருகின்றேன். இது ஏதோவோர் மருந்து வகை என்பதால் நான் 12 வருட தண்டனை பெற்றேன். இதைவிட பாராதூரமான போதை தரும் விடயங்கள் இருந்திருப்பின் என் கழுத்துப் போயிருக்கும். 9 மாதங்களாக எவ்வித விசாரணைகளும் இன்றியே இருந்தேன். 28.11.2017 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இரண்டாவது தவணையும் வழக்குத் தீர்வும் 20.12.2017 திகதி வழங்கப்பட்டது. 25.12.2017ஆம் திகதியே வழக்குத் தீர்ப்பு எழுத்துமூலம் கிடைத்தது. எனக்கும் ஹஸன் சாதாத்திற்கும் 12 வருட சிறைத் தண்டனை. 1300 கசையடிகள், 1 இலட்சம் றியால்கள் தண்டப் பணம். நான் அதிகமாக வாதாடினேன். ஓர் ஆலிம், அல்குர்ஆனை சுமந்தவன், மார்க்க பிரசாரம் செய்யக்கூடியவன், எனக்கும் இப்படியான விடயத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நான் அநியாயமாக மாட்டிப்பட்டுள்ளேன். அல்குரஆனிலும் சத்தியமிட தயாராக உள்ளேன் என்பதை நீதவானுக்கு தெளிவுபடுத்தினேன். "

சவூதி நீதிமன்ற நீதவான் சாப்ரீன் மௌலவியிடம், 478 மாத்திரைகளுடனான மாத்திரைப் பொதி  உங்களிடம் இருந்தே கைப்பற்றப்பட்டுள்ளது. சவூதி அரசாங்கத்தின் சட்ட திட்டங்களின்படி நீங்களே குற்றவாளி. எனினும் இத்தீர்ப்பில் உடன்பாடில்லாதபோது ஒரு மாத காலத்தினுள் மேன்முறையீடு செய்யலாம் எனக்கூறியுள்ளார். 

சவூதி அரேபியவுக்கான இலங்கை தூதுவராலயத்தை தொடர்புகொண்டு மேன்முறையிடுவதற்கான முன்னெடுப்புகளை சப்ரின் மௌலவியின் குடும்பத்தினர் செய்துவருகின்றனர். நான் எமது முன்னைய ஆக்கத்தில் மேன்முறையீட்டுக்கு 6 இலட்சங்கள் அளவில் செலவாகுவதாக குறிப்பிட்டிருந்தேன். அவ்வாறு எவ்வித செலவும் இல்லையென சப்ரின் மௌலவி உறுதிசெய்ததும் குறிப்பிடத்தக்கது. 

சப்ரின் மௌலவி தான் அநியாயமாக  சிக்கியுள்ளதையும், இவ்விடயத்திலிருந்து அல்லாஹ் தன்னை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையுடனும் இருக்கின்றார். இலங்கையிலிருந்து ஹஜ், உம்ரா, வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு தனக்கு நிகழ்ந்த சம்பவம் படிப்பினையாக அமைய வேண்டுமென சில விடயங்களை கூறினார். அதனையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.    

இலங்கையிலிருந்து அதிகமானோர் உம்ராவுக்கும் ஹஜ் கடமைகளுக்கு சவூதி அரேபியா பயணிக்கின்றனர். வேறு நாடுகளுக்கும் தொழில்வாய்ப்பு மற்றும் சுற்றுலா என ஏதோவொரு அடிப்படையில் பயணிக்கின்றனர். அவ்வாறான அதிகமானோர் மோசமான வியாபாரங்களுக்கு இரகசியமாக பயன்படுத்தப்படுகின்றனர். இவ்வாறான பொதிகள் வழங்கப்படுகின்றன. ஹஜ், உம்ரா முகவர்கள் மாத்திரமன்றி, உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் உங்களை இவ்வாறான விடயங்களில் பயன்படுத்தலாம். சப்ரின் மௌலவி மாட்டிப்பட்டது போன்று இலங்கையர் எவருமே சிக்கிக்கொள்ளக்கூடாது. அவருக்கு நிகழ்ந்த அநியாயம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். இவ்வாறான தீய செயல்களில் அப்பாவிகள் பயன்படுத்தப்பட்டு, மாட்டிக்கொள்ளக் கூடாதென்பதே நாம் பெறவேண்டிய படிப்பினை. 

தான் அநியாயமாக மாட்டிக்கொண்டதால் இன்று தன் மனைவி, குடும்பம் அனுபவிக்கும் துன்பங்கள் வேறுயாருக்கும் நிகழ்ந்துவிடக்கூடாதென்பதே சப்ரின் மௌலவியின் பிரார்த்தனையாகும்.  

குறித்த மௌலவி தற்போது சிறைச்சாலையில், இமாமாக தொழுகை நடத்தி வருகின்றமை மேலதிக தகவலாகும்.

5 comments:

  1. அவரின் விடுதலைக்காக அனைவரும் பிரார்த்திப்போமாக.

    ReplyDelete
  2. இத்தகைய குற்றங்களில் உண்மையிலேயே அநியாயமாக அவர் சிக்கவைக்கப்பட்டுள்ளார் எனின் அதற்கு உரிய முறையில் அணுகி அவரைக் காப்பாற்ற முயற்சி செய்து இன்சா அல்லாஹ் வெற்றியடையலாம். அதுபற்றி கலந்து பேச முதலில் எனது ஈமெயியில் தொடர்பு கொள்ளவும்.
    certifiedlkr@gmail.com

    ReplyDelete
  3. பொதியை கொடுத்த ஹாஜியார் எதனைப் புடுங்குகிறார்???

    ReplyDelete
  4. Pls What is the name of haj & umra travels

    ReplyDelete
  5. Pls What is the name of haj & umra travels

    ReplyDelete

Powered by Blogger.