அலரி மாளிகையை தேர்தல், பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய கல்வியமைச்சு
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையை, தேர்தல் பிரச்சார தேவைகளுக்காக கல்வியமைச்சு பயன்படுத்தியிருப்பதாக சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான கண்காணிப்பு அமைப்பான ‘கபே’ தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய தேவைகளுக்காக தனது இல்லத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என பிரதமருக்கு கடிதம் மூலமும் கோரிக்கை விடுத்துள்ளது.
இத்தகவலை, கெஃபேயின் நிர்வாக இயக்குனர் ராஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நடமாடும் ஆய்வகங்களை பாடசாலைகளுக்கு வழங்கும் நிகழ்வு கடந்த நான்காம் திகதியன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதில் இருந்தும் சுமார் மூவாயிரம் பேர் பங்கேற்றிருந்தனர். இதில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் உத்தியோகபூர்வ விடுமுறையில் கலந்துகொண்டதையும் தென்னகோன் சுட்டிக் காட்டியுள்ளார்.
கல்யமைச்சின் இயக்குனர் எம்.பி.விப்புலசேனவால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வை, ‘அரசியல் பரப்புரைக் கூட்டம்’ என்று குறிப்பிட்டிருக்கும் தென்னகோன், கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அதே தவறுகளை கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் பின்பற்ற முயற்சி செய்கிறாரா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த ஆட்சியில் நடைபெற்ற இதுபோன்ற தவறுகளைச் சுட்டிக் காட்டி, புதிய கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதாக சூளுரைத்த அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இப்போது, தேர்தல்களின்போது அரச வளங்கள் துஷ்பிரயோகிக்கப்படவேண்டும் என்று முடிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் தென்னகோன்.
Post a Comment