ஈரான் விவகாரத்தில், அமெரிக்கா மூக்கை நுழைப்பது சரியல்ல: ரஷ்யா கண்டனம்
ஈரான் நாட்டில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா.சபையின் அவசர கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு ரஷ்யா இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான் நாட்டு மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை கேட்டும், ஊழலுக்கு எதிராக போராடியும் வருகின்றனர். அரசுக்கு எதிராக நாடு முழுவதிலும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
கடந்த 2009-ம் ஆண்டு அந்நாள் ஆட்சியாளர்களை எதிர்த்து வீதியில் இறங்கி போராடிய மக்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தின் இறுதியில் அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், எட்டாவது ஆண்டாக தற்போது நடைபெற்றுவரும் மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ளது. அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ஆனால், அமைதியான வழியில் போராடி வரும் அவர்களை அந்நாட்டு அரசு சிறையில் அடைத்து வருகிறது.
கடந்த 28-12-2017 அன்று நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாஷாட் நகரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. தலைநகர் டெஹ்ரானில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. நாட்டின் 80 பெருநகரங்கள் மற்றும் பல்வேறு புறநகர் பகுதிகளிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் பெருகி வருகின்றன.
நாட்டின் சில பகுதிகளில் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. வங்கிகளும் தாக்குதலுக்குள்ளானதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. ஒருவார காலமாக தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. சுமார் ஆயிரம் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்களை ஒடுக்க பெருமளவில் அரசுப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மீதான அரசின் அடுக்குமுறைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒடுக்குமுறை ஆட்சிகள் என்றுமே நிலைத்ததில்லை. ஈரான் மக்களின் பேச்சுரிமையை தடை செய்ய கூடாது. அவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். தங்களது விருப்பத்தை அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான ஒருநாள் வரும். இந்த உலகம் பார்த்து கொண்டிருக்கிறது’ என குறிப்பிட்டார்.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான் நாட்டு உள்துறை அமைச்சகம், போராட்டத்தை கைவிடவில்லை என்றால் இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்கும். இதற்கு முன்னர் எப்போதும் தந்திராத விலையை அவர்கள் தர வேண்டி இருக்கும் என தெரிவித்தது. அமெரிக்காவின் தலையீட்டை கண்டித்து ஆட்சிக்கு ஆதரவான போட்டி பேரணிகளை ஈரான் அரசு தற்போது நடத்தி வருகிறது.
ஈரான் நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என ஈரானின் பகைநாடான அமெரிக்கா சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெஹ்ரானில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஜும்மா தொழுகையில் சட்டவிரோதமான பேரணிகளை நடத்திவரும் மக்களுக்கு இஸ்லாமிய மத தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அமெரிக்காவின் தூண்டுதலால் அரசை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
அமெரிக்காவின் இந்த கோரிக்கைக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று கருத்து தெரிவித்த ரஷிய நாட்டு வெளியுறவுத்துறை துணை மந்திரி செர்கேய் ரியாப்கோவ், ‘ஈரான் போராட்டம் தொடர்பாக ஐ.நா.சபை அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள அமெரிக்காவின் செயல்பாடு அந்நாட்டின் இறையாண்மைக்குள் தலையிடும் செயலாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் நடைபெற்றுவரும் போராட்டங்களில் அன்னிய சக்திகளின் தலையீடு உள்ளது என்று ஈரான் அரசு தெரிவித்து வரும் கருத்து ஆதாரமற்றது அல்ல. தங்களுக்கு பிடிக்காத அரசை வீழ்த்துவதற்காக எத்தகைய முறையையும் அமெரிக்கா கையாண்டு வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Post a Comment