பாராளுமன்றத்தை கூட்டுமாறு, ரணில் கோரிக்கை - அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது மாநாட்டை நினைவுகூரும் வகையில் பொரள்ளை - கெம்பல் மைதானத்தில் இன்று கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பான விவாதத்திற்காக நாடாளுமன்றத்தினை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகரிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பிணை முறி மோசடி தொடர்பில் விவாதம் செய்வதற்கு நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு கூட்டு எதிர்க்கட்சியினர் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன், பர்பர்ச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.
இதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே நியமித்தார். இதையடுத்து பிரதமர் மீதும் பலத்த எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கருத்து பலமாக எழுந்துள்ளது.
இதேவேளை, தன்மீது குற்றச்சாட்டு சமத்தப்பட்டுள்ளதாலும், இதை பொய் என நிரூபிக்கும் வரையில் தாம் பதவியிலிருந்து விலகுவதாகவும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்து நாடாளுமன்றில் பின்வரிசையில் சென்று அமர்ந்தார்.
இதையடுத்து, தற்போது வெளியாகியுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மற்றும் அது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட அறிக்கை குறித்து அரசியல் களத்தில் ஒரு பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.
பிரதமரும் பதவி விலக வேண்டும், இல்லையென்றால் ஜனாதிபதி அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இவ்வாறான நிலையில் பிரதமர் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருப்பது தென்னிலங்கையில் பலத்த சந்தேகத்தையும், பிரதமரின் கருத்து என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் அரசியல் ரீதியான பரபரப்பையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment