ஜனாதிபதி பொய் சொல்லுகிறார் - சார்ள்ஸ் நிர்மலநாதன்
வடக்கில் படையினர் வசம் இருந்த 80 வீதமான பொது மக்களின் காணிகள் அவர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆச்சரியமும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனை கூறியுள்ளார். அந்த கடிதத்தில் மேலும்,
வட மாகாணத்தில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் படையினர் கைப்பற்றியுள்ள பொதுமக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய காணிகள் இன்னும் படையினர் வசமே உள்ளன என்பதை தாழ்மையுடன் தெரியப்படுத்துகிறேன்.
இந்த விவசாய நிலங்களுக்கு சொந்தமான பொதுமக்களில் பலர் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வட மாகாணத்தில் பொதுமக்களின் காணிகளில் படையினர் ஆடம்பர ஹோட்டல்களையும் கட்டியுள்ளனர்.
பொதுமக்களின் இந்த காணிகளை விடுவிக்க ஜனாதிபதி தேவையான நடவடிக்கைகளை எடுத்து அதற்கான முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
அப்போது இந்த காணிகளுக்குரிய மக்கள் தமது காணிகளில் அமைதியாக வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும். இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படையினர் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகள் பற்றியும் நிர்மலநாதன் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் பட்டியலிட்டுள்ளார்.
கிளிநொச்சி முழங்காவில் 1,800 ஏக்கர் மர முந்திரிகை தோட்டம்,
மன்னார் வெள்ளாங்குளம் 500 ஏக்கர் விவசாய பண்ணை,
கிளிநொச்சி முக்கும்பம் 100 ஏக்கர் தென்னந்தோட்டம்,
முல்லைத்தீவு தேராவில் 1,200 ஏக்கர் பொது விவசாய பண்ணை,
கிளிநொச்சி வட்டக்கச்சி 400 ஏக்கர் அரசாங்கம் விவசாய பண்ணை,
முல்லைத்தீவு கேப்பாபிலவு 3 ஆயிரம் ஏக்கர் விமானப்படை மக்கள் குடியிருப்பு,
கிளிநொச்சி முழங்காவில் 800 ஏக்கர் விமானப்படை தளம்,
மன்னார் முள்ளிக்குளம் 600 ஏக்கர் கடற்படை தளம்,
முல்லைத்தீவு வட்டுவாகல் 680 ஏக்கர் இராணுவ முகாம்,
மன்னார் சன்னர் ஆயிரத்து 500 ஏக்கர் இராணுவ முகாம்,
கிளிநொச்சி சாந்தபுரம் 680 ஏக்கர் விவசாய பண்ணை,
கிளிநொச்சி ஜெயபுரம் 120 ஏக்கர் பொதுப் பண்ணை,
கிளிநொச்சி மலையாளபுரம் 798 ஏக்கர் பொதுப் பண்ணை,
யாழ்ப்பாணம் வலிக்காமம் 4,500 ஏக்கர் மக்களின் குடியிருப்பு என்பன அதில் அடங்குகின்றன.
இந்த நிலையில் குறித்த கடிதத்தின் மூலம் சார்ள்ஸ் எம்.பி மைத்திரியின் செய்தியில் உண்மையில்லை என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியுள்ளதாக பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
Post a Comment