"ஜனாதிபதி வாளை சுழற்றியதால், ரணிலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது"
ஜனாதிபதி தன்னிடம் இருக்கும் வாளில், கடந்த அரசாங்கத்தில் திருடர்களின் விரல், கை, கழுத்தை வெட்டினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் ஒருவருடம் பதவியில் இருக்க வேண்டுமா என்பதை மக்கள் சிந்தித்து பார்ப்பார்கள் என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி பகவத் கீதையை மேற்கோள்காட்டி தன்னிடம் வாள் இருப்பதாகவும் அதனை சுழற்றும் போது யார் வெட்டுப்படுவார்கள் என்று தெரியாது எனவும் கூறியிருந்தார்.
ஜனாதிபதி வாளை சுழற்றி எவரும் வெட்டுப்படாத நிலையில், வாளை கொண்டு ரணில் விக்ரமசிங்கவை கொஞ்சம் கீறினார். ஹெக்டர் ஹப்புஹாமி உட்பட எங்களுக்கும் கீறல் விழுந்தது. எம்மீது சேறு விழுந்தது.
இலங்கையை முழுமையாக விழுங்கிய திருடர்கள் இருக்கின்றனர். மைத்திரிபால அவர்கள் அங்கம் வகித்த கடந்த அரசாங்கம் 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 4 ஆயிரம் பில்லியன் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு கூறியுள்ளது.
அப்படியானால், ஜனாதிபதியிடம் இருக்கும் வாளால் சிறப்பாக வெட்டப்பட வேண்டிய பசில், கோத்தா, நாமல், விமல், கம்மன்பில என பலர் இருக்கின்றனர். எனினும் மைத்திரியிடம் இருக்கும் வாளில் இவர்களில் எவரும் வெட்டப்பட மாட்டார்கள். வாளை சுழற்றியதில் எங்களுக்கே கீறல் ஏற்பட்டது.
ஐக்கிய தேசியக்கட்சியை விமர்சித்து அரசியல் செய்து, அந்த வாளை சுழற்றி உறைக்குள் போட்டுக்கொண்டால், இந்த நாட்டில் மைத்திரிக்கு எதிர்கால அரசியல் பயணம் இல்லாமல் போகும் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment