பாராளுமன்றத்திற்குள் அடிதடியில், ஈடுபட்டால் என்னசெய்வது..?
""நாடாளுமன்றில் அடிதடியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக மீண்டும் களமிறங்க முடியாதவாறு அவர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கையையும் சட்ட நடவடிக்கையையும் சபாநாயகர் எடுக்கவேண்டும்.''
இவ்வாறு மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரான சம்பிக்க ரணவக்க கேட்டுக்கொண்டார்.
அத்தோடு, இதற்கு சபாநாயகர் மட்டுமன்றி, கட்சித் தலைவர்களும் பொறுப்புக் கூறவேண்டும் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிக்கொண்டிருக்கும்போது உறுப்பினர்களுக்கிடையில் கடுமையான கைகலப்பு இடம்பெற்றது. ஒட்டுமொத்த நாட்டுமக்களிடையேயும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள இவ்விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் காணொளி ஊடாக கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் சம்பிக்க மேற்கண்டவாறு கூறினார்.
அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
""நாடாளுமன்ற அமர்வில் ஏற்பட்ட அடிதடி தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு வகையான கருத்துகள் தற்போது நிலவிவருகின்றன. இதன்போது இந்தச் சர்ச்சையில் ஈடுபட்டவர்கள் தற்போது தாமே எதிர்த்தரப்பினரை கடுமையாகத் தாக்கினோம் என்று உற்சாகத்துடன் இருப்பதையும் காணக்கூடியவாறே இருக்கிறது. ஆனால், நாட்டையும் மக்களையும் நேசிக்கும் உண்மையான மக்கள் பிரதிநிதி இந்த அடிதடி தொடர்பில் ஒருபோதும் மகிழ்ச்சியடைவேமாட்டார்.
மேலும், இவ்வாறு நாடாளுமன்றங்களில் கைகலப்பு வருவதொன்றும் எமக்குப் புதிய விடயமல்ல. அதிகார ஆசைகொண்டோர் பக்கம் பாதாள உலகக் குழுவினர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதன் பிரதிபலனாகவே இவ்வாறான
சர்ச்சைகள் ஏற்படுகின்றன.
இதேபோன்றதொரு சம்பவம் வெளியில் இடம்பெற்றிருந்தால் பொலிஸார் குறித்த நபர்களை கைதுசெய்து சட்டத்தின் முன்னால் நிறுத்தியிருப்பார்கள். ஆனால், நாடாளுமன்றில் இடம்பெற்ற இதற்கெதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படப்போகின்றது என இதுவரை தெரியவில்லை.
இது, சபாநாயகர், பிரதமரை மட்டுமன்றி அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளையையும் கேள்விக்குட்படுத்தும் வகையிலேயே காணப்படுகிறது. இந்த நாடாளுமன்ற ஜோக்கர்கள் தொடர்பில் மக்களும் நன்கு தெரிந்துகொள்ளவேண்டும்.
எனவே, இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையும் சட்ட நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என்பதோடு, அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் களமிறங்காதவாறும் கடுமையான நடவடிக்கையையும் மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையினருக்கு இது ஒரு முன்னுதாரணமாக அமையும்'' என்றார்.
well said
ReplyDelete